`அமெரிக்கா பற்றி எரியும்’ வீடியோ மூலம் ஐ.எஸ். மிரட்டல்!

வாஷிங்டன்:  கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி நடந்த தாக்குதல் போன்று மீண்டும் அமெரிக்கா பற்றி எரியும் அளவுக்கு தாக்குதல் நடத்தப்படும்  என்று மிரட்டல் விடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வீடியோ வெளியிட்டு உள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தனிநாடு உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து நாசவேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளைக்  குறி வைத்து அமெரிக்கா போர் விமானங்கள் மூலமாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. உலகில் உள்ள அனைத்து அமெரிக்கர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று மிரட்டல் விடுத்து ஐ.எஸ். தீவிரவாத அமைப்பால் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது என்று பிரபல ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது.

“அமெரிக்கா பற்றி எரியும்” என்ற தலைப்பில் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்கள் அமெரிக்காவின் சொந்த மண்ணிலேயே தாக்குதல் நடத்துவார்கள் என்று மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

11 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின்  கொடூர காட்சிகள்  அடங்கி உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில்  கடந்த 2001 ஆம்  ஆண்டு செப்டம்பர் 11 ஆம்  தேதி அல்கொய்தா தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்பட மொத்தம் 3000 பேர் வரையில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!