அவசர அவசரமாக நீதிபதி வகேலா மாற்றப்பட்டது ஏன்? - கேள்வி கேட்கும் கருணாநிதி!

சென்னை: அவசர அவசரமாக கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா மாற்றப்பட்டு இருப்பது ஏன்? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா மாற்றப்பட்டிருக்கிறார். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி வகேலா திடீரென்று, வேறொரு சிறிய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டதற்கும், நமக்கும் என்ன சம்பந்தம் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, வகேலா பற்றிய சில விவரங்களை தெரிவிக்கிறேன்.

2–2–2015 அன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில், பவானிசிங் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நீடிக்கலாமா என்ற விசாரணை வந்தபோது, தலைமை நீதிபதி வகேலாவே, ‘‘சி.ஆர்.பி.சி. 24 (1)–ன்படி, கிரிமினல் வழக்கு ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு மாற்றம் செய்யும்போது எந்த மாநிலத்துக்கு மாற்றப்படுகிறதோ, அந்த மாநில அரசு தான் அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் தலைமை நீதிபதி வகேலா, ‘‘இந்த மேல்முறையீட்டு மனுவில் நீங்கள் (பவானி சிங்) ஆஜராகியிருப்பது சட்டத்துக்கு புறம்பானது, 24 (1)–ஐ படித்துப் பாருங்கள். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்கத் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை; கர்நாடக அரசு இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்காதபோது, பவானிசிங் ஆஜராகியிருப்பது சட்டத்துக்கு புறம்பானது’’ என்றெல்லாம் வகேலா உறுதிபடக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

தலைமை நீதிபதி இவ்வாறு பவானிசிங் அரசு வழக்கறிஞராக நீடிப்பதற்கு சட்டப்படியான எதிர்க் கருத்துகளைத் தெரிவித்ததால், பவானிசிங்குக்காக ஆஜரான வழக்கறிஞர் செபாஸ்டியன் எழுந்து, இந்த வழக்கினைத் தலைமை நீதிபதி வகேலா விசாரிக்கக்கூடாது என்றும், வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியதால், வழக்கினை வேறு அமர்வு விசாரிக்கட்டும் என்று தலைமை நீதிபதி வகேலா தானாக முன்வந்து கூறினார்.

கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வகேலா ஒரிசா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய காலேஜியம் இந்த உத்தரவை 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு பிறப்பித்துள்ளது.

நமது மதிப்புமிக்க நீதித்துறை நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்பது அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று. ஆனால் ‘‘மாறுதல்கள்’’ போடுவதில் இவ்வளவு விரைந்து செயல்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாட்டின் மீது அக்கறை கொண்ட குடிமகன் என்ற முறையில் சட்டம் மற்றும் நீதியின் பாதுகாவலர்களிடம் இருந்து சில நியாயமான கேள்விகளுக்கு பதில் கோர விரும்புகிறேன்.

ஒரிசா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி கடந்த பிப்ரவரி மாதம் 2015ல் இருந்து காலியாக இருக்கும்போது, திடீரென்று ஏன் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த ‘‘டிரான்ஸ்பர்’’ போடப்பட்டது?. தேசிய நீதித்துறை நியமனக் கமிஷனுக்கான அறிவிக்கை திங்கட்கிழமை அன்று வெளியிடப்படவுள்ள நிலையில், அதற்கு முதல் நாள் இந்த மாறுதலைச் செய்ய வேண்டிய காரணம் என்ன?.

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர உருவாக்கப்பட்ட ‘‘தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை’’ எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு முன்பு 15–4–2015 அன்று விசாரணைக்கு வருவதற்குள் ஏன் இந்த மாற்றல் உத்தரவு. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள சொத்துக்குவிப்பு வழக்கில் வாதாடிய அரசு சிறப்பு வழக்கறிஞர் நியமனம் செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பும், அதே சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பும் இப்படியொரு மாறுதல் செய்யப்பட்டுள்ளதை நாம் இந்த நேரத்தில் மறந்துவிட முடியாது.

எனவே, இந்த மாறுதல் பற்றி யாருக்காவது சந்தேகம் எழுந்தால் அதிலே தவறு இருக்க உச்ச நீதிமன்றத்தில் 15 ஆம் தேதியன்று அளிக்கப்படும் தீர்ப்பில் பவானி சிங் நியமனம் தவறானது தான் என்று ஒருவேளை சொல்லப்படுமேயானால், சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டினை விசாரிப்பதற்கு புதிய நீதிபதி ஒருவரை கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தான் நியமிக்க வேண்டும். மேலும், அரசு புதிய வழக்கறிஞராக பவானி சிங்குக்கு பதிலாக வேறு ஒருவரை நியமனம் செய்ய வேண்டிய பொறுப்பும், கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குத் தான் உண்டு.

தற்போது, ஜெயலலிதாவின் மேல் முறையீட்டினை விசாரித்து வரும் நீதிபதி குமாரசாமி வரும் ஆகஸ்டு மாதம் ஓய்வு பெறவிருப்பதால், அவருக்கு பதிலாக இந்த முக்கியமான வழக்கினை விசாரிக்க வேண்டிய நீதிபதியையும் நியமிக்க வேண்டிய பொறுப்பும் கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கே உண்டு. இந்த நிலையில் தான் அவர் மாற்றப்பட்டுள்ளார்.

எதற்காக இந்த மாறுதல்?. நீதித் துறையின் சுதந்திரம், நேர்மை, நடுநிலை ஆகியவற்றின் மீது மிக உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறோம். நாடு முழுவதும் ஒளிவு மறைவில்லாத வெளிப்படையான நிர்வாகத்திற்கான கோரிக்கை வலுப்பெற்று வரும் இந்த காலகட்டத்தில், அரசின் முடிவுகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் வேளையில், நீதித்துறையின் நிர்வாக முடிவுகள் மட்டும் வேறு ஒரு தளத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் ஏன் இருக்க வேண்டும் என்று சில மூத்த வழக்கறிஞர்களும், நடுநிலையாளர்களும், பத்திரிகையாளர்களும் நம்மிடம் கேட்கும்போது நாம் என்ன பதில் கூறுவது?.

நமது ஜனநாயக நாட்டில் அனைத்துக்கும் மேலானது நீதித்துறை தான்; ஜனநாயகத்தின் அனைத்து அங்கங்களையும் கண்காணிப்பதே நீதித்துறை தான். அப்படிப்பட்ட உயிர் நாடியான அந்த துறையின் மீதே, இதுவரையில் இல்லாத அளவுக்கு, இப்படி எல்லாம் விமர்சனங்கள் வருவது நம் நாட்டுக்கும், நாம் போற்றிப் பாதுகாத்து வரும் ஜனநாயகத்திற்கும், வாய்மையே வெல்லும் என்று நாம் கொண்டாடி வரும் கோட்பாட்டுக்கும் உகந்தது தானா?" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!