ராகுலின் திறமை மீது ஷீலா தீட்சித் சந்தேகம்!

புதுடெல்லி:  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் ஆளுமைத்திறன் மீது சந்தேகம் எழுகிறது என்று  தெரிவித்துள்ள டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே நீடிக்க வேண்டும்  என கூறியுள்ளார்.

டெல்லி மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ராகுல் பொறுப்பேற்றால் என்ன நடக்கும்? என்ன நடக்காது? என்பது பற்றி என்னால் எந்த யோசனையையும் தெரிவிக்க முடியாது. அவரால் சிறப்பாக செயல்பட இயலும். அதே நேரம், சோனியா காந்தி கட்சியின் தலைமையை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் அவரைவிட இன்னொருவர் ஆற்றல் மிக்கவராக திகழ முடியுமா? என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் அதனால், காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா நீடிப்பது தான் மகிழ்ச்சியான உணர்வாக இருக்கும்.

சோனியா தலைவராக நீடிப்பது கட்சிக்கு நல்லது என்று எதனால் கூறுகிறேன் என்றால், அவர் நாம் எதிர்பார்க்காத முடிவுகளை எடுப்பார். 2 பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோதிலும், அவர் பிரதமர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். தவிர, அவர் காங்கிரசின் உறுதியான தலைவரும் ஆவார். ராகுல் காந்திக்கு இன்னும் செயலாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கான பொறுப்பையும் இதுவரை அவர் பெறவில்லை. ராகுல் காந்தியின் ஆளுமைத்திறன் மீது சந்தேகம் எழுகிறது. எனவே அவருடைய தலைமை பற்றி முன்கூட்டியே கணிப்பது சரியாக இருக்காது.

மேலும், பொறுப்புகளைத் தட்டிக் கழித்துவிட்டு ஓடிப்போகக் கூடியவர் அல்ல சோனியா காந்தி. தவிர, அவர் அதுபோன்று செய்வார் என்றும் நான் கருதவில்லை. எனது பேட்டியை சில செய்தி சேனல்கள், ராகுல் காந்தி திறமை இல்லாதவர் என்று நான் கூறியதாக வெளியிட்டு வருகின்றன. நான் அப்படி எதுவும் கூறவில்லை. ராகுல் காந்தி ஓய்வில் இருக்கிறாரே? என்று எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்து வருவது ஒன்றுமே இல்லாத பிரச்னை. இதற்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!