தீவிரவாத தாக்குதல் மீண்டும் நடக்கலாம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

புதுடெல்லி: மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் போல், மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பை ரயில்வே போலீசாருக்கு இந்த மாத தொடக்கத்தில் மத்திய உளவுத்துறை ஒரு கடிதம் அனுப்பியது. அதில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பையில் ஓட்டல்கள், ரயில் நிலையங்களில் 2 அல்லது 3 மாதங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தனர். 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி கடல்வழியாக வந்து ஓட்டலில் தாக்குதல் நடத்தியது போல இந்த தாக்குதல் இருக்கலாம் என்றும் அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருந்தனர்.

இது குறித்து உளவுத்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, ''அனைத்து மாநிலங்களுக்கும் சில நாட்கள் முன்பு தீவிரவாத தாக்குதல் பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதில் எந்த குறிப்பிட்ட இலக்கு குறித்தும் கூறப்படவில்லை" என்றனர்.

இதை தொடர்ந்து, அனைத்து போலீஸ் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. நட்சத்திர ஓட்டல்களில் கூடுதல் போலீசாருடன், துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுதவிர முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும், மும்பையின் முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பயணிகள் கொண்டுவரும் உடமைகள் தீவிர பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகிறது. மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!