ஜெயலலிதாவுக்கு ஜாமீன் நீட்டிக்கப்படுமா? வரும் 17ல் தெரியும்!

சென்னை: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிப்பது குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது.
 

பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து, அ.தி.முக. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்ச் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. அத்துடன் விசாரணையை டிசம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்டோரின் ஜாமீன் மனுவின் மீது டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், அவர்களுக்கு கடந்த அக்டோபர் 17ஆம் தேதி வழங்கப்பட்ட ஜாமீனை மேலும் நான்கு மாதங்களுக்கு அதாவது ஏப்ரல் 18ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

மேலும், ‘ஜெயலலிதா உள்ளிட்டோர் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க தனி பெஞ்சை ஏற்படுத்த வேண்டும். இந்த பெஞ்ச் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். ஜெயலலிதா தரப்பு தங்களுடைய வாதங்களை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன்படி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்தது. இந்த விசாரணை முடிந்து தீர்ப்பை நீதிபதி குமாரசாமி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ஏப்ரல் 18ஆம் தேதியோடு முடிவடைகிறது. இந்நிலையில் வரும் 17ஆம் தேதி ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு ஜாமீன் நீட்டிப்பு வழங்குவது தொடர்பான விசாரணை,  உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!