டப்பிங் சீரியலுக்கு எதிராக களத்தில் இறங்கும் டிவி நடிகர், நடிகைகள்!

சென்னை: ‘டப்பிங்’ தொடர்களை நிறுத்தக்கோரி, ‘சின்னத்திரை’ நடிகர்-நடிகைகள் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
 

வறுமை மற்றும் கடன் தொல்லை காரணமாக சின்னத்திரை இயக்குனர் பாலாஜி யாதவ் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். சின்னத்திரையில் பிற மொழிகளில் தயாராகும் தொடர்கள் அதிக அளவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவதால், நேரடி தமிழ் தொடர்களின் தயாரிப்பு எண்ணிக்கை குறைந்து விடுவதாகவும், இதனால் தமிழ் கலைஞர்கள் வாய்ப்பு இழப்பதாகவும் கூறப்படுகிறது. பாலாஜி யாதவின் தற்கொலைக்கு இதுவே காரணம் என்று கூறப்பட்டது.

இதைக் கண்டித்து, சின்னத்திரை நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்தார்கள். அதன்படி, சின்னத்திரை நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் வேலை நிறுத்த போராட்டம் நாளை  நடக்கிறது. சின்னத்திரை சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகள், எடிட்டிங், டப்பிங் போன்ற தொழில்நுட்ப பணிகள் எதுவும் நாளை நடைபெறாது.

சின்னத்திரை கலைஞர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ‘பெப்சி’ (தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்) ஆதரவு தெரிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஜி.சிவா கூறுகையில், "சின்னத்திரை நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் நாளை காலை 9.30 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் சங்கத்தில் கூடி, அங்கிருந்து ஒவ்வொரு டி.வி. அலுவலகத்துக்கும் சென்று பிறமொழி தொடர்கள் தயாரிப்பை நிறுத்தக்கோரி, வேண்டுகோள் விடுக்க இருக்கிறோம்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!