மண் எடுத்து புத்தாண்டை வரவேற்ற விவசாயிகள் திருவிழா

மிழர்களின் பாரம்பரிய பரிமாணங்கள்தான் எத்தனை, எத்தனை...? அவற்றில் மனம் லயிக்காதவர் எவ ரேனும் உண்டா? தமிழர்களின் பண்பாடு தெரிய ஆசைப்படுபவர்கள், தயவு செய்து இதைப்படியுங்கள்.

நல்ல மகசூல் தர, இயற்கையை வேண்டி, மண் எடுத்து வரும் திருவிழா மேலூர் அருகேயுள்ள கீழையூரில் விவசாயிகளால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

மதுரை மாவட்டம் ,மேலூர் அருகேயுள்ள கீழையூரில், தமிழ் வருடத்தை வரவேற்கும் விதமாகவும், விளை நிலத்தில் மகசூல் பெருகவும் வழிபாடு நடத்தினர். விவசாய பொருட்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வழிபாட்டின்போது கயிறு, மண்வெட்டி, தார்க்கம்பு, கலப்பை ஆகியவற்றை உடன் வைத்திருந்தும்; நிலத்தில் குழி தோண்டி பருத்தி விதை, அத்தி மர இலை ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று நன்கு கலந்து வைத்துவிட்டு சூடம், வத்தி, சாம்பிராணி காட்டியும் புத்தாண்டை வரவேற்றனர்.

வழிபாட்டின் நிறைவாக, வயல்களில் ஏர் பூட்டி உழுது, வழிபட்ட இடத்திலிருந்து, வீட்டிற்கு மண் எடுத்துச் செல்லும் விநோத வழிபாடு நடைபெற்றது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த கலையரசன் கூறுகையில், "இப்படி வழிபட்டுட்டு வீட்டிற்கு போகும் போது, மண் எடுத்துட்டுப் போவதால், வரும் ஆண்டில், மழை நன்கு பெய்து காடு கரை செழிக்கும். கால்நடைகள் பசி பட்டினியில்லாம இருக்கும். எந்த நோயும் அண்டாது என்பது ஐதீகம்'' என்றார்

நிலம் சார்ந்த வாழ்க்கையை மதிப்பவர்கள் எப்போதுமே தமிழர்கள் என்றால் அது மிகையல்ல. மண்ணைப் போற்றுவோம். மண்ணைப் பாதுகாப்போம்.

- ம.மாரிமுத்து
(மாணவப் பத்திரிக்கையாளர்)

படங்கள்:
சே. சின்னத்துரை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!