உயிர் காக்கும் மருந்து இனி பணக்காரர்களுக்கு மட்டும்தானா?

ந்திய அரசாங்கம் புற்றுநோய் போன்ற உயிர் காக்கும்  மருந்துகள் உட்பட  509 அத்தியாவசிய மருந்துகளின் விலையை ப்ரல் மாதம் முதல் 3.84 சதவிகிதத்திற்கு அதிகரித்து கொள்ளலாம் என்று மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. மேலும் 348 அத்தியாவசிய மருந்துகளை தவிர, மற்ற மற்ற மருந்துகளின் விலைகளை ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதம் வரை உயர்த்திக் கொள்ளலாம் என்ற  அனுமதியையும் வழங்கியிருக்கிறது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டு மருந்து நிறுவனங்கள், தனது அபரிதமான லாபங்களுக்காக இந்திய காப்புரிமை சட்டத்தை வலுவிழக்க செய்யும் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தால்,  மருந்துகளின் விலை
அபரிதமாக உயர்ந்து, இந்தியா மட்டுமின்றி இந்திய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 200 நாடுகளில் வசிக்கும் ஏழை எளிய கீழ் தட்டு,  நடுத்தர வர்க்க மக்களை மிகவும் துயரத்துக்குள்ளாக்கும் நிலை உருவாகும்.

இந்திய அரசு கடந்த 2005 ஆம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பில் (WTO) சேர்ந்தது. அந்த ஒப்பந்தத்தில்  சர்வ தேச வர்த்தக விதியில் அறிவுசார் சொத்துடைமை உரிமைக்கான,  வணிக முறையிலான (Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS)] கோட்பாடு இருக்கிறது.  அதன்படி  பொது சுகாதார பாதுகாப்பு முறைகளை  உள்ளடக்கிய  காப்புரிமை சட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.  இந்திய காப்புரிமை சட்டம் பிரிவு 3 ல் உட்பிரிவு 'டி'  (Section 3(d) of India’s patent law) புதிய மருந்துகளுக்கு மட்டும்  காப்புரிமை வழங்க வேண்டும் என்று கூறுகிறது.

ஏற்கெனவே உள்ள மருந்துகளில்  புதிய மாற்றங்கள் செய்யப்படுவதற்கு  காப்புரிமையில்லை  என்று அந்தச் சட்டம் குறிப்பிடுகிறது. பழைய மருந்துகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டால்,  சிகிச்சையில் அதிகப் படியான பலன் கிடைக்கும் பட்சத்தில்  மட்டுமே காப்புரிமை  வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட சர்வதேச ஒப்பந்த வர்த்தக விதிமுறைகளின்படி (WTO TRIPS Agreement)  இந்த ஒப்பந்தத் தில் கையெழுத்திட்ட மற்ற வளர்முக நாடுகள் போன்றே இந்தியாவிற்கும்  கட்டாய உரிமம் (compulsory license) வழங்க உரிமை உள்ளது. அதாவது ஒரு நாட்டில், அரசால் காப்புரிமை அளிக்கப்பட்ட மருந்தை மக்களால் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலோ அல்லது அந்த மருந்து கிடைப்பது மிகவும் அரிதாக இருந்தாலோ அந்த மருந்தை குறைந்த விலையில்  தயாரிக்க  உள் நாட்டு நிறுவனங்கள் முன்வரலாம்.

அதற்கு  இந்த  கட்டாய உரிமம் வழங்கப்படுகிறது . இந்திய காப்புரிமை சட்டத்தில்  இந்த  கட்டாய உரிமம் வழங்குவதற்கு  தனிப்பிரிவே இருக்கிறது. ஆனால் பல ஆண்டுகளாக அமெரிக்க மருந்து நிறுவனங்கள்,  இந்திய காப்புரிமை சட்டத்தை வலுவிழக்க செய்ய அமெரிக்க அரசாங்கத்தின் மூலமாக இந்திய அரசாங்கத் திற்கு கடுமையான நெருக்குதல்களை கொடுத்து வருகிறது

2015 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி, இந்திய காப்புரிமை சட்டத்தில் திருத்தங்கள் எதையும் கொண் டு வரும் எண்ணம் எதுவும்  மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபையில் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பொழுது கூறினார் என்றாலும்,  அறிவுசார் சொத்து உரிமைகள் மீதான ஒரு பரந்த கொள்கை வெளியே வர, சிந்தனைக் குழு ( think tank)  அமைக்கப்பட்டிருக்கிறது.  அந்த சிந்தனைக் குழுவும் முதல் வரைவு அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது.

தொழிற் கொள்கை மற்றும் அதன் மேம்பாட்டு துறை (Department of Industrial Policy and Promotion (DIPP) அந்த வரைவு அறிக்கையில் பொது கருத்துக்களை கோரியிருக்கிறது என்று அப்பொழுது  அவர்  கூறியதில்தான் அமெரிக்கவிடம் மோடி அரசு பணிந்து விட்டதோ என்று சந்தேகம் எழுந்திருக்கிறது. 

ஏனென்றால் அமைச்சர் குறிப்பிட்ட சிந்தனைக் குழு, புதிய சொத்துரிமை கொள்கையில் பயன்பாட்டு மாதிரி களை (utility models) அறிமுகம் செய்ய வேண்டுமென்று வரைவு கொள்கையில் யோசனை தெரிவித்திருக் கிறது.  இந்த சிந்தனைக் குழு திரு மோடியின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு ஏற்படுத்தப்பட்டது.

பயனீட்டு மாதிரி (A Utility Model) என்பது வழங்கப்பட்ட ஒரு சட்டரீதியான  ஏகபோகம் ஆகும். தற்பொழுதுள்ள இந்திய காப்புரிமை சட்டப்படி அதிக உபாயம் இல்லாத கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வழங்கப்படுவ தில்லை. இந்த மாதிரியான சிறிய  கண்டுபிடிப்புகளுக்கு  காப்புரிமை வழங்க பயனீட்டு மாதிரி என்ற  சிறு காப்புரிமை ( ‘minor patents) சட்டம் பயன்படும்.

இந்திய காப்புரிமை சட்டத்தின்படி   மருத்துவத்துறையின் உயர் தர கண்டுபிடிப்புகளுக்குதான் காப்புரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்த  பயனீட்டு மாதிரி இந்திய காப்புரிமை சட்டத்தின் நல்ல நோக்கத்தையே  சீர்குலைத்துவிடும். பன்னாட்டு நிறுவனங்கள்  இந்த பயனீட்டு மாதிரியை பயன்படுத்தி, காப்புரிமை காலாவதியான தனது பழைய  கண்டுபிடிப்புகளில் சிறிது மாற்றம் செய்து காப்புரிமை பெற்றிடமுடியும். அதனால் உயிர்க்காக்கும் மருந்துகள் ஏழை எளிய மற்றும்  கீழ் தட்டு நடுத்தர வர்க்க மக்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும் .

ஒரு சில சர்வதேச தொண்டு நிறுவனங்கள், “மருத்துவ துறை பயனீட்டு மாதிரி சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும்” என்று கேட்டுகொண்டிருக்கின்றன.

இந்திய மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், ஐரோப்பிய ஆணைக்குழு கடுமையான காப்புரிமை சட்டத்திற்கு அழுத்தம் கொடுத்து, இந்திய நாட்டில் உற்பத்தியாகும் மலிவான மருந்துகளுக்கு தடை ஏற்படுத்திவிடுமோ  என்ற அச்சத்தை.பொது சுகாதார குழுக்கள் மற்றும் இந்திய மருந்து நிறுவனங்கள் எழுப்புகின்றன.

ஒபாமா - மோடி சந்திப்பின் பொழுதும், அதனை தொடர்ந்து அமெரிக்க - இந்திய கூட்டு செயற்குழு இந்திய "அறிவுச்சார் சொத்துரிமை" சம்பந்தமாக தெரிவிக்கும் யோசனைகளை ஏற்க தயாராக இருப்பதாக இந்திய பிரதமர் கூறியிருந்ததும், அமெரிக்கா மற்றும் அதன் பங்குதாரர்கள்  "அறிவுச்சார் சொத்துரிமை  பிரச்னை களை சரி செய்வது சம்பந்தமாக  இந்தியாவிடம்  உத்தரவாதம் வாங்கிவிட்டதாக  அமெரிக்க வர்த்தக பிரதி நிதி மைக்கேல் ப்ரோமன், நிதிக்கான அமெரிக்க செனட் சபையிடம் தெரிவித்த பொழுதும் இதேபோன்ற அச்சங்கள்  எழுப்பட்டிருக்கின்றன.

அப்படி ஐரோப்பிய ஆணைக்குழுவின் முயற்சி நிறைவேறி, ஐரோப்பா வழியாக  குறைந்த விலை  இந்திய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டால் காப்புரிமை விதிமீறலாக கருதப்பட்டு கடுமையான அபராதம் வசூலிக்கும் நிலை ஏற்படும். மேலும் இந்த ஷரத்து, மருந்து வினியோகம் செய்பவரை மட்டுமில்லாமல் ஏற்றுமதியாளர்களையும், சிகிச்சை அளிப்பவர்களையும்  விதிமீறலுக்கு உட்படுத்தும்.

கடந்த கால மத்திய அரசு, அமெரிக்கா ஐரோப்ப  நாடுகளின் நெருக்கடிகளுக்கு  அடிபணியாமல் மக்களின்  நலன் கருதி இந்திய காப்புரிமை சட்டத்தில் எந்த மாற்றங்களும் கொண்டுவராமல், இவ்விஷயத்தில் மக்கள் பக்கமே நின்றது.

தற்பொழுதுள்ள மோடி தலைமையிலான மத்திய அரசும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிபணியாமல் தற்பொழுதுள்ள வலுவான  இந்திய காப்புரிமை சட்டத்தை பாதுகாத்து ஏழை எளிய மற்றும்  கீழ்த்தட்டு நடுத்தர வர்க்க மக்களுக்கு தொடர்ந்து குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க செய்து, அவர்களின்  விலைமதிக்க முடியாத உயிர்களை காக்க வேண்டும்.

-வி. ஆர் சீனிவாசன்


Do you like the story?

Please Appreciate the Author by clapping!