பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறார் இலங்கை அதிபர் சிறிசேன மகள்!

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் மகனான கால்நடை மருத்துவர் விமுக்தி குமாரதுங்க மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிகா சிறிசேன ஆகியோர் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

விமுக்தி குமாரதுங்க அரசியலில் நுழைவதற்கு தாயார் சந்திரிகாவின் முழுமையான ஆசீர்வாதம் கிடைத்துள்ளது.

ஒரு போதும் அரசியலில் நுழையமாட்டேன் என கூறிக்கொண்டிருந்த விமுக்தி குமாரதுங்க, தந்தை பண்டாரநாயக்கவின் ஆதரவாளர்கள் வழங்கிய யோசனையையடுத்து தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என சிந்தித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விமுக்தி குமாரதுங்க, வெகுவிரைவில் இலங்கையில் மிக தரமான விலங்குகளுக்கான மருத்துவமனை ஒன்றை நிர்மாணிக்கவும் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை பூட்டான் பிரதமர் ஷெரின் டொப்கேயின் இலங்கை விஜயத்தின் போது அவரது மனைவியின் உதவி பெண்ணாக அதிபர்  மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிகா சிறிசேன செயற்பட்டதால், அரசியல் வட்டாரங்களில் வெகுவாக பேசப்பட்ட ஒருவராகிவிட்டார்.

எது எவ்வாறாயிருப்பினும், சமீபத்தில் பொலன்நறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அதிபர் சிறிசேன, தனது குடும்பத்தில் உள்ள எவரும் அரசியலில் ஈடுபடமாட்டார்கள் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!