அன்னா ஹசாரேவுடன் கை கோர்க்கும் தமிழக விவசாயிகள்!

2013-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் மிச்சமில்லாமல்  வேட்டையாடப்போகும் கோர வடிவிலான நிலம் கையகப்படுத்தும் அவசரச்  சட்டத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது.

இதை கண்டித்து கடந்த மார்ச் 18-ம் தேதி இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து வந்து குவிந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி வீதிகளை போராட்டக் களங்களாக மாற்றினர். போராட்டத்தின் ஐந்தாம் நாளில், போராட்டக்குழு பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து விவசாயிகளுக்கு எதிரான இந்த அவசரச்  சட்டத்தை நீட்டிக்க கையெழுத்திட வேண்டாம் என்ற கோரிக்கையினை முன் வைத்து விட்டு போராட்டத்தினை கைவிட்டனர். ஆனால் சட்டம் காலாவதியாவதை தடுக்க, ஏப்ரல் 5-ம் தேதி இந்த சட்டத்தினை நீட்டிக்கும் கையெழுத்து போடப்பட்டது.

இந்நிலையில் 'டெல்லியின் போரட்டத்தை மாநிலத்தின் ஒவ்வொரு தெருக்களுக்கும் கொண்டு செல்வோம்' என்று கூறிய உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்துவின் தலைமையில், தமிழகத்தின் பலதரப்பட்ட விவசாய சங்க அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளில் 25 பேர் கொண்ட குழு, ஏப்ரல் 11-ம் தேதி டெல்லி சென்று, அன்னா ஹசாரேவை சந்தித்து இப்பிரச்னைகள் குறித்து பேசி வந்துள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்து செல்லமுத்துவிடம் பேசுகையில்,

"குதிரை குப்புற தள்ளியது மட்டுமில்லாமல், குழியும் பறிக்கின்ற கதையாகத்தான்  உள்ளது மோடி அரசின்  செயல்பாடுகள். தேர்தல் பிரசார காலங்களில் விவசாயிகள்தான் எங்கள் உற்ற நண்பன் என்று கூறிய மோடி, டெல்லியில் எங்கள் போராட்டங்களை துளியும் மதிக்கவில்லை. டெல்லி வீதிகளில் சாப்பிட்டுவிட்டு தூங்கிக் கிடந்த எங்களை ஒரு அமைச்சர் கூட வந்து பார்க்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுதான் சட்டத்தினை வடிவமைத்தனர். ஆனால், பா.ஜ.க அரசோ 'நிலத்தை பறித்துக் கொள்வோம், கொடுப்பதை வாங்கிக்கொண்டு ஓடிவிடுங்கள், எங்களை எதிர்த்து நீதிமன்றம் கூட செல்லமுடியாது' என்ற வெளிப்படையான தன்மையோடும், சர்வாதிகார திருத்தங்களோடும், விவசாயிகளுக்கு எம்மாதிரியான விளைவுகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்ற அதிகார திமிரோடும்தான் இந்த அவசரச்  சட்டத்தினைக் கொண்டுவரத் துடிக்கிறது. காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்திற்கும், திருத்தப்பட்ட சட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகளை பட்டியலிட்டு தெளிவாய் காட்ட மறுக்கின்றது இந்த மோடி அரசு.

பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்திருக்கும் சிவசேனா கட்சியும், மற்ற கட்சிகளும், அமைப்புகளும் இந்த சட்டத்தினை கடுமையாக எதிர்க்கும்போது, அ.தி.மு.க.வோ அரசியல் அணுகூலம் தேடி ஆதரிக்கிறது. இவற்றையெல்லாம் பேசினால் விவசாயிகள் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உதவாமல் சுயநலமாக செயல்படுகின்றனர் என்று சொல்லி விடுகின்றனர். நாட்டின் வளர்ச்சிக்கு சுயநலமின்றி தங்களது உயிரான நிலங்களைத் தரும் விவசாயிகளை நடுத்தெருவில் விடப்போகும் நடவடிக்கையினை கண்டித்தால் சுயநலமா? நாட்டில் 50% முதல் 60% வரை உள்ள பாசன வசதிகள் இல்லாத நிலங்களை எடுத்துக் கொள்ளாமல் விளைநிலங்களை பறிப்பது எவ்வளவு கொடூரமான செயல். கடந்த மாதம் சங்கரன்கோவில் அருகே 2,000 ஏக்கர் விளைநிலங்களை சிப்காட் நிறுவனம் கையகப்படுத்த முயலுகையில் விவசாயிகளின் போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. 

இப்படியிருக்க, ஏப்ரல் 11-ம் தேதி காலை டெல்லியில் பல விவசாய சங்க அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 25 பேர் கொண்ட குழுவினர், அன்னா ஹசாரேவை சந்தித்து இப்பிரச்னைகள் குறித்து பேசினோம். நாட்டில் எந்த அரசியல் கட்சிகள் தவறு செய்தாலும் தட்டிகேட்கும் தன்மை கொண்டவராக மட்டுமில்லாமல், இந்த வன்மையான சட்டத்தை அதிதீவிரமாக எதிர்த்து வருகிறார் என்பதாலேயே அவரிடம் இந்தப்  பிரச்னையை கொண்டு சென்றோம்.

முழுக்க முழுக்க விவசாயிகளின் கருத்தும், அவருடைய கருத்தும் ஒன்றாகவே உள்ளது. மேலும் இந்த சட்டத்தினை எதிர்த்து வடமாநிலங்களில் தீவிரமாக போராடி வருகிறார். ஏப்ரல் 12-ம் தேதி புனேவில் கூட்டம் போட்டுள்ளார். எல்லா மாநில விவசாய அமைப்புகளை டெல்லிக்கு வரச்சொல்லி எல்லா மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்த தேதிகள் பிரித்துக் கொடுத்து வருகிறார். தமிழகத்திலிருந்து நாங்கள் சென்று பேசியது அவரின் போரட்டத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளதாக கூறினார்.

நாங்கள் அனுமதி கேட்டவுடனேயே தமிழகம் வந்து முழுமூச்சாய் போராட உடனே ஒப்புக்கொண்டார். மே மாதம் தஞ்சை, கொங்குமண்டல பகுதிகளில் இரண்டு நாட்கள் தங்கி போராட்டக்கூட்டங்கள் நடத்தப்போகிறார். இதில் இந்த அவசர சட்டத்தினால் வரப்போகும் தீமைகளை பற்றியும், சட்டத்தில் திருத்தங்கள் கோரியும், ஆதரித்த அ.தி.மு.க அரசையும் கண்டித்தும் பேசப் போகிறார். அனைத்து விவசாய அமைப்புகளும் கலந்து கொள்கின்றனர்.

தங்களின் நிலம் தங்களுக்கு இல்லாமல் போகப்போகிறது, பறிக்கப்படபோகிறது என உணர்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு விவசாயியும், துடிப்போடு ஒன்றிணைந்து அதிகார அரசுகளை ஆட்டிப்பார்க்கப் போகிறோம். நீதிமன்ற வழக்கும் விசாரணைக்கு வரவிருக்கிறது. ஊழலுக்கு எதிராக நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த அன்னா ஹசாரேவின் குரல், இந்த நில கையகப்படுத்தும் அவசர சட்டத்திற்கு எதிராகவும் ஓங்கி ஒழித்து நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கப்போகிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் உந்துதலில் இந்த சட்டத்தை அமல்படுத்தத் துடித்துக்கொண்டிருக்கும் மோடியின் திருத்த சட்டத்தின்படியே எங்கள் விளை நிலங்களை கொடுத்துவிட்டால், ஒவ்வொரு விவசாயியையும் அரசு ஊழியராக அறிவித்து, அரசின் அனைத்து சலுகைகளையும் அளிக்க திறம் இருக்கிறதா?"  என ஆதங்கத்துடன் கூறினார்.

கு.முத்துராஜா (மாணவ பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!