வெளியிடப்பட்ட நேரம்: 12:06 (29/04/2015)

கடைசி தொடர்பு:18:32 (29/04/2015)

தமிழகம் முழுவதும் நாளை ஆட்டோக்கள், லாரிகள் ஓடாது!

சென்னை: மோட்டார் வாகன சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை ஆட்டோக்கள், லாரிகள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சாலை விபத்துகளை குறைப்பதற்காக மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தை திருத்த ஒரு கமிட்டி அமைத்துள்ளது. இந்த கமிட்டி, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் வகையில் முக்கிய அம்சங்களை கொண்ட வரைவு சட்டத்திருத்ததை உருவாக்கியுள்ளது. அதில் விதிகள், அபராதங்கள், கடுமையாக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், ஹெல்மட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500, இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம், செல்போன் பேசிக் கொண்டே ஓட்டினால் ரூ.5,000 அபராதம், தொடர்ந்து 3 முறை சிக்கினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வது போன்ற கடுமையான பரிந்துரைகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஓட்டுனர் உரிமம், வாகனப்பதிவு போன்றவற்றிற்கான கட்டணமும் பல மடங்கு உயர்த்தவும், மாநிலங்களில் உள்ள பொது போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை கண்டித்து நாளை (30 ஆம் தேதி) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் மத்திய தொழிற் சங்கங்கள் ஈடுபடுகின்றன. தமிழகத்தில் அ.தி.மு.க. தொழிற்சங்கம் தவிர மற்ற அனைத்து தொழிற் சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றன. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பி.எம்.எஸ்., எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., தொ.மு.ச, திராவிட தொழிற் சங்க பேரவை, எம்.எல்.எப்., விடுதலை தொழிலாளர் முன்னணி, பட்டாளி தொழிற் சங்கம் உள்ளிட்ட மத்திய, மாநில தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களும் இதில் கலந்து கொள்கின்றனர்.

இந்த வேலை நிறுத்தத்தினால் பஸ், லாரி, ஆட்டோக்கள் நாளை ஓடுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன (ஏ.ஐ.டி.யு.சி) பொதுச்செயலாளர் சேஷசயனம், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் கூறும்போது, ''மத்திய அரசு கொண்டு வரும் புதிய போக்குவரத்து மசோதா அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும். இதனை கைவிட வேண்டும். இதை கண்டிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 2 லட்சத்து 40 ஆயிரம் ஆட்டோக்கள் நாளை ஓடாது. சென்னையில் 72 ஆயிரம் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், டாடா மேஜிக், அபே ஆட்டோக்கள் இயங்காது. சென்னையில் பல இடங்களில் பிரச்சார கூட்டம், ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளது" என்றனர்.

இதேபோல் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், ''புதிய சட்டம் தனியாருக்கு சாதகமாக உள்ளது. பொதுமக்களின் உரிமையை பாதிப்பதாகவும் அமையும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் ஓடாது'' என்று அறிவித்துள்ளது.

அதே நேரம், அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தனியார் பஸ் உரிமையாளர் சங்க மாநில தலைவர் கூறும்போது, ''இந்த போராடடத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை. ஆனாலும், பஸ் ஊழியர்கள் எதிர்ப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடுவார்கள். அனைத்து தனியார் பஸ்களிலும் எதிர்ப்பு நோட்டீஸ் ஒட்டப்படும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்