வேளாண் பல்கலை. மாணவர் சேர்க்கையில் திருநங்கைகளுக்கு 3% இடஒதுக்கீடு! | University of Agriculture. 3% admission quota for transgender!

வெளியிடப்பட்ட நேரம்: 15:48 (29/04/2015)

கடைசி தொடர்பு:16:07 (29/04/2015)

வேளாண் பல்கலை. மாணவர் சேர்க்கையில் திருநங்கைகளுக்கு 3% இடஒதுக்கீடு!

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில் 2015-16ம் கல்வி ஆண்டு முதல் திருநங்கைகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வரும் கல்வியாண்டில் (2015-16) இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் மே 15-ம் தேதி துவங்குவதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி இளங்கலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மே 15-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். உறுப்புக் கல்லூரிகளில் 1,220 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 1,080 இடங்களும் என மொத்தம் 2,300 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி கூறுகையில், ''தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2015-16) இளநிலை படிப்புகளில் 2,300 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மே 15-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படும். வேளாண்மை பல்கலைக்கழக இணைய தளத்தில் உள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மே 15-ம் தேதி முதல் ஜூன் 13-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

தொடர்ந்து ஜூன் 20-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 29-ம் தேதி முதல் ஜூலை 11-ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையிலும் நடக்கும். ஜூலை 27-ம் தேதி கல்லூரி துவங்கும். தேவைப்பட்டால் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடக்கும். மொத்தம் 2300 இளநிலை படிப்புகளுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும், இந்த ஆண்டு முதல் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் திருநங்கைகளுக்கு 3 சதவீத இட ஓதுக்கீடு வழங்கப்படும்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, அனைத்து பாட பிரிவுகளிலும் இரு இடங்கள் ஜம்மு - காஷ்மீர் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு ஹோம் சயின்ஸ் என்ற 4 ஆண்டு பாடத்தை மாற்றி அமைத்து புட் சயின்ஸ் அண்டு நியூட்ரீசன் என்ற புதிய படிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது'' என்றார்.

விண்ணப்பிப்பது எப்படி?

பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்காக தேர்வு செய்யப்படுவர். மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர முறையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். இக்கல்வியாண்டில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதன்படி வேளாண்மைப் பல்கலைக்கழக இணையதளத்திற்குச் சென்று (www.tnau.ac.in/admission.html) விண்ணப்பத்தை அத்தளத்திலேயே பூர்த்தி செய்து, பதிவு செய்ய வேண்டும்.

சிறப்பு இட ஒதுக்கீடுகளுக்கான முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர், விளையாட்டு வீரர்கள் பிரிவில் விண்ணப்பிப்போர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவு செய்தபின், விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் பேங்கிங், கிரடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம். நெட் பேங்கிங், கிரடிட், டெபிட் கார்டுகள் இல்லாதவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வங்கி ரசீது (செலான்) மூலம் எந்தவொரு ஸ்டேட் வங்கி கிளையிலும் கட்டணத்தைச் செலுத்தலாம்.

ச.ஜெ.ரவி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்