லாரி, ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக்: பேருந்துகள் உடைப்பு! | Trucking, auto union leaders strike: Buses stoned

வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (30/04/2015)

கடைசி தொடர்பு:13:07 (30/04/2015)

லாரி, ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக்: பேருந்துகள் உடைப்பு!

சென்னை: சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டத்தை (மோட்டார் வாகனம் சட்ட மசோதா) திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இன்று ஒரு நாள் பேருந்து, லாரி-ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர்.
 

மத்திய அரசின் புதிய சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ மற்றும் டாக்சி சங்கத்தினர் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர் நலன்களை பாதுகாக்கும் சட்டங்களை பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தங்களை செய்து வருகிறது.  மத்திய அரசின் சட்டதிருத்த வரிசையில் தற்போது நடைமுறையில் உள்ள மோட்டார் வாகன சட்டம் 1988 முழுமையாக மாற்றியமைக்கப்பட்டு, சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டம்-2015 என்ற சட்ட முன் வடிவு வெளியிடப்பட்டுள்ளது.

மாநில அரசின் அதிகாரத்தை முற்றிலுமாக பறித்து,  சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் மத்திய அரசு தனது பொறுப்பில் எடுத்துக்கொள்கிறது.
 

இச்சட்டத்தினால், சாலை போக்குவரத்து தொழிலை நம்பியுள்ள பல லட்சக்கணக்கான தொழிலாளர்களான ஓட்டுனர்கள், வாகன பராமரிப்பு பணியாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவர். இத்தகைய கொடுமையான சட்டத்தினை நடைமுறைபடுத்த மத்திய அரசு, மக்கள் கருத்தறிய எந்த வித வாய்ப்பும் அளிக்கப்படாமலேயே நிறைவேற்ற முனைகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியில், சேவைத்துறையில் நான்கு சதவிகித வளர்ச்சியை வழங்கி வரும் சுமை மற்றும் பயணிகளை ஏற்றிச்செல்லும் சாலை போக்குவரத்து அமைப்பையே,  இச்சட்டம் சீர்குலைக்கும் என்பதோடு, சாலைபோக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் மாநில பொதுபோக்குவரத்து அமைப்புகளை சீர்குலைக்கும். இச்சட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தி, அகில இந்திய மோட்டார் தொழிலாளர் அமைப்புகள் எடுத்த முடிவின் அடிப்படையில் இன்று ஒரு நாள் அகில இந்திய அளவில் ஒருநாள் நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

வட மாநிலங்களான டெல்லி, பெங்களூரு,கொல்கத்தா, குஜராத், பீகார், ஆகிய  நகரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலையில் வேலைக்கு செல்வோர் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
 

தமிழகம் முழுவதும் உள்ள 2 லட்சத்து 40 ஆயிரம் ஆட்டோக்கள் இன்று இயக்கப்படவில்லை. இதனால், பேருந்துகளிலும், மின்சார ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. ஏஐடியூசி தொழி்ற்சங்கத்தினர் சாலை மறியிலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

படங்கள்: அ.குரூஸ்தனம், எஸ்.தேவராஜன்


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்