சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 50 பேர் காயம்!

விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சுமார் 50 பேர் காயமடைந்தனர்.

சாத்தூர் அருகே சிவசங்குப்பட்டியில் உள்ள மீனா ஃபையர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை 10 மணியளவில் சுமார் 250 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஆலையை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இந்த ஆலையில் தொழிலாளர்கள், சிறிய மற்றும் வண்ண ரக பட்டாசுகள் தயாரிக்கும்போது, பட்டாசுகள் இடையே ஏற்பட்ட உராய்வால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தினால் 6 அறைகள் தரைமட்டமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த  விபத்து குறித்த தகவல் அறிந்து சிவகாசி, சாத்தூரில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்தது. வெடி விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.

இந்த விபத்தில் சிலர் தீயில் கருகி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் ஆலையில் வேலை பார்த்த 50–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!