லஞ்சம்: அடுத்து வெளியாகிறது போக்குவரத்து அதிகாரிகள் பட்டியல்! | Next released transport authorities Corruption list!

வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (06/06/2015)

கடைசி தொடர்பு:13:45 (06/06/2015)

லஞ்சம்: அடுத்து வெளியாகிறது போக்குவரத்து அதிகாரிகள் பட்டியல்!

திருச்சி: போக்குவத்து துறையில் உள்ள லஞ்ச அலுவலர்களின் பட்டியலை விரைவில் வெளியிடுவோம் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நேற்று மாலை நடைபெற்றது. மாநில தலைவர் சுகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய பலரும் மாநில அரசை கண்டித்து பேசினர். கூடவே "சாலை போக்குவரத்து, பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தேசிய நெடுஞ்சாலைத்துறை சுங்க சாவடிகளில் சாலை சீரமைக்காமல் அடிப்படை வசதி செய்து தராமலும், முறையாக பதிவு செய்யப்பட்ட லாரிகளுக்கு கட்டண சலுகை அளிக்காமலும் பல வகையான முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதை அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும்.

டீசல், இன்சூரன்ஸ் பிரிமியம் தொகை உயர்வை திரும்ப பெற வேண்டும். அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளின் மீது வழக்கு தொடரக் கூடாது" என்று முழங்கினர்.
 

அதிக பாரம் ஏற்றிவிடும் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் வழக்கு தொடர்வோம் என்று கூறி லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிக பாரங்களை போக்குவரத்து அலுவலர்கள் அனுமதிப்பதால், சாலை விபத்து, உயிரிழப்புகள் நடைபெறுகிறது. இதனை கண்டித்து போக்குவரத்து அலுவலகங்களை முற்றுகையிட்டு, பூட்டு போடும் போராட்டம் வரும் ஜூலை 1ஆம் தேதி நடத்துவது என்பன உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பேசிய மாநில பொதுச்செயலாளர் முருகன், "லாரி உரிமையாளர்கள் போக்குவரத்துத்துறை அலுவலர்கள், காவல்துறையினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்திட அரசு முன்வர வேண்டும். அவ்வாறு  அரசு முன்வராத பட்சத்தில் போக்குவரத்து துறையில் உள்ள லஞ்ச அலுவலர்களின் பட்டியலை நாங்கள் விரைவில் வெளியிடுவோம்" என்றார்.

- சி.ஆனந்தகுமார்

படங்கள்:
தே.தீட்ஷித்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்