முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையின் மனைவி தற்கொலை முயற்சி!

சென்னை: கலையரங்கம் திரையரங்க பிரச்னை தொடர்பாக முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் மனைவி கஸ்தூரி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ளது கலையரங்கம் திரையரங்கம். மாவட்ட நலப்பணிக்குழுவிற்கு சொந்தமான இந்த திரையரங்கத்தை, கடந்த 2012ம் வருடம் முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் மனைவியான ஆமீனாபீ என்கிற கஸ்தூரி குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், திரையரங்கத்துகான உரிமம் புதுப்பிக்கப்படாததால் கடந்த மார்ச் மாதம் வருவாய்த்துறை அதிகாரிகள் திரையரங்கத்துக்கு சீல் வைத்தர்கள். இந்த உரிமம் புதுப்பிப்பது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கஸ்தூரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் திரையரங்கம் சீல் வைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை வாங்கிய நிலையில், தொடர்ந்து திரையரங்கத்தில் திரைப்படம் திரையிடப்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களாக நடிகர் சூர்யாவின் 'மாசு' திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த நிலையில், நேற்று காலை ஆர்.டி.ஓ. கணேசசேகரன் தலைமையிலான அதிகாரிகள் கலையரங்கம் திரையரங்கத்திற்கு வந்து, நுழைவாயில் கதவுகள் மற்றும் கதவுகளுக்கு சீல் வைத்தனர். வாடகை பணம் கட்டாததாலும், உரிமம் புதுப்பிக்கப்படாததாலும் சீல் வைக்கப்பட்டதாகவும், ஏற்கனவே வைக்கப்பட்ட சீலையும் மீறி படம் திரையிடப்பட்டதால் சீல் வைத்ததாகவும் ஆர்.டி.ஓ. கணேசசேகரன் கூறினார்.

இந்நிலையில் நேற்று இரவு உயர்நீதிமன்ற ஆணை வழங்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் சீல் வைத்துவிட்டதாக குற்றம் சாட்டிய கஸ்தூரி, உயர்நீதிமன்ற ஆணையை அனைத்து அதிகாரிகளுக்கும் தனது வழக்கறிஞர்கள் மூலம் கொடுத்தார். ஆனால், திரையரங்கு சீல் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் கஸ்தூரி, அதிகாரிகள் தகவல் தெரிவிக்காமல் சீல் வைத்துள்ளதாகவும், மாவட்ட நலப்பணி நிதிக்குழுவின் மேலாளர் திருநாவுக்கரசுவும், தாசில்தார் ரவி உள்ளிட்டோர் தன்னை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரிடம் கஸ்தூரி புகார் மனு கொடுத்தார்.

இதுகுறித்து இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய கஸ்தூரி, ''வாடகை தொகையை செலுத்த தயாராக உள்ளேன்.  எவ்வளவு பணம், எங்கு கட்ட வேண்டும் என அதிகாரிகள் சொல்ல மறுக்கிறார்கள். இப்படியிருக்கையில் தியேட்டரை சீல் வைத்துள்ளனர். மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியும் தியேட்டரை நடத்த முடியாமல் செய்கிறார்கள். நேற்று சீல் வைத்தபிறகும் அனுமதி இருப்பதால் சீலை எடுத்துவிட்டு படம் ஓட்டினேன். ஆனால் திரையரங்கு முன் போலீசாரை குவித்துள்ளார்கள். மாநகர கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் சரோஜ்குமார் தாகூர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அந்நேரத்தில் தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்தது. படத்தை நிறுத்தி விட்டு ரசிகர்களை வெளியேற சொன்னார்கள். அப்போது எங்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆனாலும், படம் முடிந்த பிறகு அதிகாரிகள் மீண்டும் சீல் வைத்தனர். மீண்டும் அவர்களுக்கும், எங்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அரசு சார்பில் சீல் வைத்ததை மீறி படம் திரையிட்டது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாக உதவி கலெக்டர் கணேசசேகரன் சொன்னார்.

இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்றத்தில் நேற்று 7 நாள் அவகாசமும் மொத்த பாக்கி வாடகையில் 25 சதவீதம் கட்ட சொல்லியும் உத்தரவு கொடுத்தாங்க. நாங்கள் இந்த ஆர்டரையும் கலெக்டரிடம் கொடுத்தேன். இதற்கும் எனக்கும் சம்மந்தம்யில்லை என அலைகழிக்கிறார்.

கோடிக்கணக்கில் கடன் வாங்கி திரையரங்கை குத்தகைக்கு எடுத்து நடத்தினால், என்னை தொழில் நடத்தவிடாமல் தடுக்கிறார்கள். தொடர்ந்து இப்படி எல்லாம் செய்ய மாட்டேன். இங்கேயே என் உயிரை மாய்த்துக்கொள்வேன். எனது சாவுக்கு காரணம் யார் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு, மாத்திரை எடுத்து சாப்பிடும்போது திரையரங்கு ஊழியர்கள் தடுத்து காப்பாற்றியுள்ளார்கள். திரையரங்கிற்கு முடிவு தெரியாவிட்டால் நான் சாவதை தவிர வேறு வழியில்லைங்க'' என்றார்.

இந்நிலையில், கஸ்தூரி உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி தென்னூர் கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, திருச்சி எம்.பி. குமார், தன்மீது அவதூறு பரப்பும் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருப்பதால் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சீலை உடைத்து படம் திரையிட்டதாக கஸ்தூரி, அவர்து அப்பா பாலசுப்பிரமணியன், கஸ்தூரி, திரையரங்க ஊழியர்கள் 15 பேர் மீது,  திருச்சி கண்டோன்மெண்ட் ஆய்வாளரிடம் கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சி.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!