வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (14/06/2015)

கடைசி தொடர்பு:16:46 (14/06/2015)

ரவுடி கிட்டப்பா சுட்டுக் கொலை எதிரொலி: நெல்லையில் 6 பேருந்துகள் மீது கல்வீச்சு!

திருநெல்வேலி: நெல்லை பிரபல ரவுடி கிட்டப்பா போலீசாரின் என்கவுன்ட்டர் வேட்டையில் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதியில் ரவுடி  கிட்டப்பாவின் ஆதரவாளர்கள் 5 அரசுப் பேருந்து உள்பட 6 பேருந்துகள் மீது கல்வீசி கலவரத்தில் ஈடுபட முயன்றனர்.
இது தொடர்பாக 22 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பத்தமடை கரிசூழ்ந்தமங்களம் அருகே கான்சாபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குட்டி மகன் கிட்டு என்ற கிட்டப்பா  கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கிட்டப்பாவை தனிப்படை போலீஸார் சனிக்கிழமை பிடிக்க முயன்றபோது, நிகழ்ந்த மோதலில் கிட்டப்பா துப்பாக்கி சூட்டில் பலியானான்.

மோதலின் போது   தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், காவலர்கள் கிருஷ்ணசாமி, சரவணசுந்தர் ஆகியோர் கிட்டப்பா மற்றும் அவனின் கூட்டாளிகள் தாக்குதலில் காயமடைந்தனர்.

பின்னர் இறந்த கிட்டப்பாவின்  உடல் வைக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் ,இன்று  அவரது மனைவி பேச்சியம்மாள், உறவினர்கள், ஆதரவாளர்கள் திரண்டு முற்றுகையிட்டனர். கிட்டப்பா கொல்லப்பட்டதற்கு அவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.அரசு மருத்துவமனையில் மாநகர காவல் துணை ஆணையர் ப. ராஜன், உதவி ஆணையர் மாதவன்நாயர் ஆகியோர் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனையில் இருந்து திரும்பிய கிட்டப்பாவின் உறவினர்கள் வரும் வழியில், பாளையங்கோட்டையில் தனியார் கல்லூரி அருகில் புதிய பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து, பழையப் பேருந்து நிலையம் அருகில் மற்றொரு அரசுப் பேருந்து ஆகியவற்றின் மீது கல்வீசி தாக்கினர்.

தொடர்ந்து குலவணிகர்புரத்தில் வைத்து பாளையங்கோட்டை நோக்கி வந்த அரசு பேருந்து, தருவையிலிருந்து சந்திப்பு நோக்கி வந்த மினி பேருந்து மீதும் கல்வீசி தாக்கினர்.

இதில் 4 பேருந்துகளின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.பேருந்துகள் மீது கல்வீசி தாக்கியவாறு சென்று கொண்டிருந்த 22 பேரை போலீஸார் விரட்டி சென்று மேலப்பாளையத்தில் வைத்து பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் 2 பேருந்துகள்: கிட்டப்பா கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பேட்டை, சுத்தமல்லி, மேலச்செவ்வல் உள்பட பல்வேறு பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு திருநெல்வேலியிலிருந்து ஆத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்து மீது சமாதானபுரத்தில்ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் கல்வீசினர். தொடர்ந்து கே.டி.சி நகர் பணிமனைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீதும் மர்ம நபர்கள் கல்வீசினர்.

இந்த சம்பவங்களால் நெல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்