வெளியிடப்பட்ட நேரம்: 10:33 (17/06/2015)

கடைசி தொடர்பு:17:44 (17/06/2015)

இப்படி பாடாய் படுத்துறீங்களேப்பா...!

சென்னை: சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே இன்று காலை தடம் புரண்டது. அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து உடனடியாக சீர் செய்யப்படாததால் சென்னைக்கு வரும் பயணிகள் பெருத்த அவதிக்குள்ளாகினர்.

பெங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த (வ.எண்:12692) சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை 4.30 மணியளவில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் டிரைவர், ரயிலின் பாதையை மாற்றி உள்ளார். இதில், ரயில் என்ஜின் மற்றும் முதல் 2 பெட்டிகள் சரியாக தடம் மாறின. ஆனால், அதற்கு அடுத்து இருந்த 3 மற்றும் 4வது பெட்டிகள் திடீரென தடம் புரண்டு உள்ளது.

இதை அறிந்த ரயில் டிரைவர் உடனே ரயிலை நிறுத்தி உள்ளார். இதனால், அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் காயம் அடையாமல் பத்திரமாக உயிர் தப்பினர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் காலை 7.45 மணிக்கு, தடம் புரண்ட பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தி, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த விபத்து காரணமாக திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் ரயில்களில் இருந்து நடந்தே அடுத்த ரயில் நிலையம் வந்து பேருந்துகளில் பயணித்ததோடு, ஆட்டோக்களிலும் கூடுதல் கட்டணம் கொடுத்து அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர்.

சென்ட்ரலுக்கு காலை 9 மணிக்கு வரவேண்டிய ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில், வியாசர்பாடி ரயில் நிலையத்திலும், பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்திலும், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் பெரம்பூர் லோகோவிலும் நிறுத்தப்பட்டன.

மேலும், விபத்து நடந்த பகுதியில் ரயில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டாததால், இந்த மார்கத்தில் சென்னை வரும் புறநகர் ரயில்களும் பெரம்பூர், வியாசர்பாடி போன்ற ரயில் நிலையங்களில் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டன. இதனால், சென்னைக்கு வேலைக்கு வரும் பயணிகளும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் பெருத்த அவதிக்குள்ளாகினர்.

இந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பயணிகள் கூறுகையில், "அதிகாலையில் பேசின்பிரிட்ஜ் ரயில் பெட்டி தடம்புரண்டது. இந்த ரயில் பெட்டியை மீட்பதற்காக சுமார் 4 மணி நேரத்திற்கு மேலானது. தடம்புரண்ட ரயில் பெட்டி மீட்கப்பட்ட நிலையிலும், தண்டவாளத்தை சரி செய்வதற்கு பல மணி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் அனைத்து வசதிகளும் கொண்ட சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலேயே இந்த விபத்து ஏற்பட்டு, தடம்புரண்ட பெட்டியை அகற்றுவதற்கும், தண்டவாளத்தை சரி செய்வதற்கும் 5 மணி நேரத்திற்கு மேல் ஆகியுள்ளது. பல கிலோ மீட்டர் தூரத்தில் விபத்து ஏற்பட்டிருந்தால் பயணிகள் கதி என்ன ஆகியிருக்கும். அனைவரும் அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு வீட்டிற்குதான் சென்றிருக்க வேண்டும். ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியம் நாளுக்குநாள் அதிகரித்துதான் சென்று கொண்டிருக்கிறது" என்றனர் வேதனையுடன்.

மற்றொரு பயணி கூறுகையில், "சென்ட்ரல் புறநகர் ரயில்நிலையத்தில் தற்போது 3 தண்டவாளங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 15 நிமிடம் இடைவெளிவிட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, திருப்பதி உள்ளிட்ட இடங்களில் இருந்து ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் வருவதற்கு போதும்போதும் என்று ஆகிவிடுகிறது. பேசின்பிரிட்ஜில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருவதற்கு 5 நிமிடங்களே அதிகம். ஆனால், 20 நிமிடம் முதல் 30 நிமிடம் கழித்துதான் சென்ட்ரலை வந்தடைகிறது ரயில். அந்த அளவுக்கு சிக்னல், தண்டவாளம் பிரச்னை. இந்த பிரச்னையை சரிசெய்வதற்காக கடந்த ஜனவரி மாதம் புறநகர் ரயில் நிலையத்தில் இடது பக்கமும், வலது பக்கமும் புதிதாக இரண்டு தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. தண்டவாள பணிக்காக அருகில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதோடு, அங்கிருந்த கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. சுமார் 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்றுவரை புதிய தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவில்லை. அந்த அளவுக்கு ரயில்வே நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்படுகிறது. டிக்கெட் கட்டணத்தை இஷ்டத்துக்கு உயர்த்தி பயணிகளை சாகடிக்கும் ரயில்வே நிர்வாகம், இப்படி செயல்படுவது நியாயமா? என்று ஆதங்கப்பட்டார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்