'நேர்முகத்தேர்வு ஊழலுக்கே வழி வகுக்கும்' | 'Interview appointment gives rise to corruption'

வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (17/06/2015)

கடைசி தொடர்பு:17:31 (17/06/2015)

'நேர்முகத்தேர்வு ஊழலுக்கே வழி வகுக்கும்'

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் நேர்முகத்தேர்வு மூலம் ஆய்வக உதவியாளர் நியமனம் ஊழலுக்கே வழி வகுக்கும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் நியமனம் நேர்முகத் தேர்வில் போட்டியாளர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைக்கு மாறானது. இது கடும் கண்டனத்துக்குரியது.

தேசிய இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகளிலும், மேல்நிலைப்பள்ளிகளிலும் 4362 ஆய்வக உதவியாளர்களை நியமிப்பதற்கான அறிவிக்கையை கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. இப்பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, அதன்பின் மாவட்ட அளவில் நேர்காணல் நடத்தப்படும் என்றும், நேர்காணலில் ஒவ்வொருவரும் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதற்கு அனைத்துத் தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் நேற்று பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, நேர்காணலில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில்தான் ஆய்வக உதவியாளர் பணி நியமனம் செய்யப்படும் என்றும், இதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.

பொதுவாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய ஆட்சிப் பணி உள்ளிட்ட குடிமையியல் பணிகளுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும்  தொகுதி-1, தொகுதி-2 பணிகளுக்கும் மட்டும்தான் எழுத்துத் தேர்வும் நேர்காணலும் நடத்தப்படும்.  தொகுதி-3, தொகுதி-4 பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மூலமாகவே ஆட்கள் நியமிக்கப்படுகின்றார்கள். ஆய்வக உதவியாளர் பணி என்பது தொகுதி-4 பணிகளில் வரும் இளநிலை உதவியாளர் நிலைக்கு சமமானதுதான். இளநிலை உதவியாளர்கள் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு நடத்தி, அதிலுள்ள மதிப்பெண்களை கருத்தில் கொள்ளாமல், நேர்முகத் தேர்வு நடத்தில் அதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில்தான் பணி நியமனம் செய்யப்படும் என்பது இதுவரை எங்குமே கேள்விப்படாத நடைமுறையாகும்.

கடந்த காலங்களில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் வேலைவாய்ப்பக பதிவு மூப்பின்படிதான் நிரப்பப்பட்டு வந்திருக்கின்றன. பொது அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பங்களைப் பெற்றுதான் அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பதால் எழுத்துத் தேர்வின் மூலம் ஆய்வக உதவியாளர்களை தேர்ந்தெடுக்கலாம். ஆனால், தமிழக அரசு கடைப்பிடிக்கும் புதிய முறை ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இது நேர்மையான நியமனங்களுக்கு வழி வகுக்காது.

பொதுவாகவே நேர்காணல்களில்தான் முறைகேடுகள் செய்யப்படுகின்றன என்ற அவநம்பிக்கை அனைவரிடமும் உள்ளது. அதுமட்டுமின்றி, ஒரு மாணவரின் திறமையை மதிப்பிடுவதற்கான தெளிவான வரையரைகள் எழுத்துத் தேர்வில்தான் உள்ளன. அவ்வாறு இருக்கும் போது நேர்காணலின் மூலம் பணி நியமனம் செய்வது ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும் மட்டுமே வழி வகுக்கும். எனவே, ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆய்வக உதவியாளர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்