வாஞ்சிநாதனால் கொல்லப்பட்ட ஆங்கிலேய கலெக்டருக்கு மலரஞ்சலி: நெல்லையில் பரபரப்பு! | Tribute paid to Ash Durai - Tenison in Tirunelveli

வெளியிடப்பட்ட நேரம்: 14:49 (17/06/2015)

கடைசி தொடர்பு:20:26 (17/06/2015)

வாஞ்சிநாதனால் கொல்லப்பட்ட ஆங்கிலேய கலெக்டருக்கு மலரஞ்சலி: நெல்லையில் பரபரப்பு!

நெல்லை: சுதந்திர போராட்ட தியாகி வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்ற ஆங்கிலேயே கலெக்டர் ஆஷ்துரை கல்லறைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்ட இந்தியாவை மீட்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்த காலக்கட்டத்தில், நெல்லை மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதனும், சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வந்தார்.

இந்நிலையில், அப்போது நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த ஆங்கிலேயர் வில்லியம் எஸ்கார்ட் ஆஷ் ரயிலில் பயணம் செய்த போது, மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து, வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1911ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது.

ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனும் தன்னைத்தானே சுட்டுக் கொன்று வீர மரணத்தைத் தழுவினார். இந்த சம்பவம் ஆங்கிலேயருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

வாஞ்சிநாதனின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் வாஞ்சிநாதனின் நினைவு தினத்தை பல்வேறு அமைப்பினரும் அனுசரித்து வருகின்றனர். அதேபோல் இந்த ஆண்டும் வீரவாஞ்சி மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆங்கிலேய கலெக்டர் ஆஷ்துரை கல்லறைக்கு ஆதி தமிழர் கட்சியினர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாளையங்கோட்டையில் உள்ள இங்கிலீஷ் சர்ச் வளாகத்தில் ஆஷ்துரை கல்லறைக்கு இன்று காலை வந்த ஆதி தமிழர் கட்சி நிர்வாகிகளான கலைக்கண்ணன், சங்கர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, வீரவணக்கம் செலுத்தினர்.

இதுபற்றி கூறிய கலைக்கண்ணன், ''தீண்டாமை நிலவிய கொடூரமான காலக்கட்டத்தில் சமத்துவத்துக்காக பாடுபட்டவர் ஆஷ்துரை. அனைத்து மக்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய காரணத்தால், சனாதன தர்மத்தை வலியுறுத்தியவர்களின் கோபத்துக்கு உள்ளானவர். சமூக விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்களுள் முதன்மையானவர் ஆஷ்துரை என்பதால் அவருக்கு எங்களது கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தினோம்'' என்றார்.

ஒரு பக்கம் வாஞ்சிநாதனுக்கு மரியாதை செலுத்துவதும், இன்னொரு பக்கம் அவரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷ்துரைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்ததால், நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

-ஆண்டனிராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்