இரு சக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்ல; பயணிப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்!

சென்னை: ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்ல; பயணிப்பவரும் ஹெல்மட் அணியாவிட்டால்  ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்றும்,  ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டுபவர்களின் லைசென்ஸை பறிமுதல் செய்ய பரிந்துரைத்தும் சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 8 ஆம் தேதியன்று பரபரப்பு உத்தரவை பிறப்பித்தது.


சாலைகளில் நேரும் விபத்துகளின் போது அதிக அளவிலான உயிரிழப்புகள், ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளால்தான் நிகழ்கிறது என்பதால் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்திருந்தது.

மேலும், இருசக்கர வாகனங்கள் ஓட்டும் நபர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால், அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம் என்றும், ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்ல பயணிப்பவரும் ஹெல்மெட் அணியாவிட்டால்  ஓட்டுநரின் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், "01.07.2015 முதல் இரு சக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பயணிப்பவர் தலைக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். தவறும் பட்சத்தில், மோட்டார் வாகனச் சட்டம் - 1988,  பிரிவு 206-இல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, சம்மந்தப்பட்ட  இரு சக்கர வாகனத்தின் அனைத்து ஆவணங்கள் மற்றும் ஓட்டுநரின் உரிமம் ஆகியவை
பறிமுதல் செய்யப்படும். 

இந்திய தர நிர்ணய சான்று பெற்ற புதிய தலைக்கவசம் மற்றும் அதனை வாங்கியதற்கான ரசீது ஆகியவற்றை காண்பித்தால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் விடுவிக்கப்படும் என இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உபதேசம் ஊருக்குத்தானா...காவல்துறைக்கு இல்லையா?

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து,   தமிழகம் முழுவதும் காவல்துறையினர், ஹெல்மெட் போடுங்கள் என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். ஹெல்மெட்டோடு வாகன அணிவகுப்பு செய்கிறார்கள்.  நோட்டீஸ் வழங்கி வருகின்றார்கள்.

இன்று காலை 11மணியளவில் திருச்சி காவல்துறை ஆணையர் சஞ்சய் மாத்தூர்,  திருச்சி தலைமை தபால்நிலையம் அருகே  ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.  ஹெல்மெட் அணிவது குறித்து சில நிமிடங்கள் பேசிய அவர், அடுத்து  சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் கொடுத்தார்.

அதில் பலர் ஹெல்மெட் அணியாமல் வரவே, "ஏன் ஹெல்மெட் போடல...? ஹெல்மெட் போடலன்னா என்ன ஆகும்னு தெரியுமா?" என அறிவுறை கூறிவிட்டு கிளம்பினார். அவர் போன  சிறிது நேரத்தில் அங்கு கூடிய போலீஸ்காரர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். அவர்களில் பெரும்பாலனவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்பதுதான் வேடிக்கை. இது இப்படியிருக்க  கார் ஓட்டினால் சீட் பெல் போடவேண்டும் என்பது போக்குவரத்து விதிகள் சொல்ல கமிஷனர், துணை ஆணையர், உதவி ஆணையர் என யாருடைய காரிலும் சீட் பெல்ட் இல்லை.

கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் ஹெல்மெட் மட்டுமல்ல சீட் பெல்ட் போடவில்லை என்றால்கூட அபராதம் உண்டு. சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றவில்லை என்றால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பதுதான் காரணம். ஆனால் ஊருக்குதான் உபதேசம்போல  இருந்தது...ஹெல்மெட், சீட் பெல் அணியாமல் காவல்துறையினர் சென்றது..

இந்த நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களில் அரசு சின்னத்திற்கு கீழ் பதியப்பட்டிருக்கும் வாய்மையே வெல்லும் எனும் truth alone triumph எனும் ஆங்கில வார்த்தையில் ட்ரூத் என்கிற வார்த்தை மட்டும்  ஏனோ அழிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சட்டமும் விதியும் சாமானிய மக்களுக்கே அதை ஆளுபவர் இல்லைபோல.

பொதுமக்கள் ஹெல்மெட் அணிவது இருக்கட்டும் முதலில் அவர்களுக்கு வழிகாட்டும் விதமாக  அரசு அதிகாரிகள் அணியலாமே ஹெல்மெட்.

-சி.ஆனந்தகுமார்

படம்: தே.தீட்ஷித் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!