வெளியிடப்பட்ட நேரம்: 20:57 (18/06/2015)

கடைசி தொடர்பு:11:14 (19/06/2015)

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மருத்துவமனை முன்பு மாணவி நந்தினி பிரசாரம்!

நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனை முன்பாக சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, தனது தந்தையுடன் மது ஒழிப்பு பிரசாரம் மேற்கொண்டார்.

நெல்லையை அடுத்த, நாங்குநேரியில் நேற்று மாலை பள்ளி வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 25 பள்ளி குழந்தைகள் காயம் அடைந்தனர். அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு, பள்ளி வாகன ஓட்டுநனர் குடிபோதையில் இருந்ததே காரணம் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பல்வேறு விபத்துக்களுக்கு காரணமாக இருக்கும் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடி வரும் மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி இன்று மாலை நெல்லை வந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் பள்ளிக் குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவமனை முன்பாக மதுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி நின்றார். அவருடன் அவரது தந்தையும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் பேசிய நந்தினி, ''மதுக்கடைகளால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். பல குடும்பங்கள் சொல்ல முடியாத துயரத்தை சந்தித்து வருகின்றன. இந்த பள்ளிக்குழந்தைகள் விபத்துக்கூட மதுவால்தான் நடந்துள்ளது. இவ்வளவு நடந்த பின்னரும் அரசு மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பது வேதனைக்குரியது.

நான் ஏற்கனவே, மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தியுள்ளேன். இதுவரை என்னை 27 முறை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். 2 முறை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இருப்பினும், மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறேன். மதுக்கடைகளை மூடும் வரை எனது போராட்டம் தொடரும்'' என்றார்.

-ஆண்டனிராஜ்


படங்கள்: எல்.ராஜேந்திரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க