சட்டமன்ற தேர்தலில் நாகர்கோவிலில் போட்டியா?: சரத்குமார் பதில்!

நாகர்கோவில்: சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர்தான் நாகர்கோவிலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்வேன் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும் கூட்டணி உள்ளிட்ட தேர்தல் வேளைகளில் இப்போதே களமிறங்கி உள்ளன.

இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சி நிர்வாகத்தினர் மற்றும் தொண்டர்களிடம் ஆலோசனை நடத்தியும், வளர்ச்சி நிதி பெற்றும் வருகிறார். சமீபத்தில், தூத்துக்குடி மற்றும் வள்ளியூரில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி நிதி பெற்றார்.

அதன்படி நேற்று இரவு கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அக்கட்சியின் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ''நான் இப்போது நடிகர் சங்க தேர்தல் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. நான் மதுரை ஆதீனத்தை சந்தித்தது குறித்து காரணம் கேட்கிறார்கள். மதுரை ஆதீனத்திற்கும் நடிகர் சங்கத்திற்கும் சம்பந்தம் இல்லை என சொல்லிவிட முடியாது. அதன் அடிப்படையில்தான் அவரை சந்தித்து பேசினேன்.

சமத்துவ மக்கள் கட்சி அரசியலில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. வரும் காலங்களில் இது மாபெரும் அரசியல் சக்தியாக மாறும். அ.தி.மு.க.வில் நாங்கள் அங்கம் வகித்தாலும், தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளை அரசுக்கு சுட்டிக் காட்டுவோம்.

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதன் மூலம் நம் நாடு வளர்ச்சி அடைந்தால் எனக்கு மகிழ்ச்சி தான். ஆனால், அவர் இங்குள்ள பிரச்னைகளில் மவுனமாக இருப்பது ஏன் எனத் தெரியவில்லை. தற்போது அத்வானிக்கும், மோடிக்கும் நடுவில் என்ன பிரச்னை என்பது குறித்து நான் ஒன்றும் சொல்ல முடியாது'' என்றவரிடம்,

'நீங்கள் அடிக்கடி கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளுக்கு வருகிறீர்கள். சட்டமன்ற தேர்தலில் இந்தப் பகுதியில் போட்டியிடும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டதற்கு, ''தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் நாகர்கோவிலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய முடியும்'' என்றார்.

இதன்பின்னர் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் ரூ.10 லட்சம் கட்சி வளர்ச்சி நிதியை பெற்றுக்கொண்டு சரத்குமார் உரையாற்றுகையில், ''நமது நாட்டில் இன்றும் கொஞ்ச காலங்களில் நம்மிடம் காசு இருக்கும். ஆனால், சாப்பிட உணவு இருக்காது. எனவே, அந்த நிலைமையை நாம் மாற்ற வேண்டும். உணவு தட்டுப்பாடு வராமல் இருக்க விவசாயத்திற்கு நாம் உயிர் கொடுப்போம். அதற்காக, நமது லட்சியமான வீட்டிற்கு ஒரு விவசாயியை நாம் உருவாக்குவோம்.

சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. அதை நன்கு உழைத்தால் சீக்கிரமே பெற்றுவிடலாம். கட்சி தொண்டர்கள் சிறுக, சிறுக பணத்தை சேர்த்து வருங்காலங்களில், அதிகமாக கட்சி வளர்ச்சி நிதி கொடுக்க வேண்டும். கட்சி தொடங்கி இது வரை நிதி வாங்கியது இல்லை. ஆனால், கட்சியின் எதிர்கால செயல்பாடுகளுக்காகவே இப்போது வளர்ச்சி நிதி வாங்குகிறோம்'' என்றார்.

த.ராம்


படங்கள். ரா.ராம்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!