நெல்லையப்பர் கோவில் கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது! | Nellaiappar Temple Flag Hoisting

வெளியிடப்பட்ட நேரம்: 12:08 (22/06/2015)

கடைசி தொடர்பு:15:33 (22/06/2015)

நெல்லையப்பர் கோவில் கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது!

நெல்லை: நெல்லைப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலின் ஆனித்திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று விமரிசையாக நடைபெற்றது.

தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சைவத் திருத்தலங்களுள் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். திருஞான சம்பந்தர், அருணாச்சல கவிராயர் உள்ளிட்டோரால் பாடல்பெற்ற இந்த திருத்தலத்தில் ஆனித்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் இன்று தொடங்கி உள்ளது. இதற்காக, கோவில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பந்தல்கால் நடப்பட்டு, நெல்லையப்பர் வீதி உலா வரும் தேருக்கு பூஜைகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பத்து நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவின்போது, தினமும் சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்படும். இதையடுத்து, தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, வருகின்ற 30 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நெல்லையப்பர் அருளை பெறுவார்கள்.

-ஆண்டனிராஜ்

படங்கள்:
எல்.ராஜேந்திரன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்