காலாவதியான மருந்து: அரசு மருந்து குடோனில் சி.பி.ஐ. தீவிர சோதனை!

சென்னை: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் காலாவதியான மருந்து மாத்திரைகள் வெளிச் சந்தையில் விற்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான மருந்து குடோனில் தீவிர சோதனை மேற்கொண்டனர். 

சென்னை வேப்பேரியில் உள்ள புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் பின்புறம், மத்திய அரசுக்கு சொந்தமான மருந்து குடோன் உள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி, அந்தமான் ஆகிய மாநிலங்களுக்கு இங்கிருந்துதான் மத்திய அரசு சார்பில் மருந்து சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

இந்த குடோனில் இருந்து காலாவதியான மருந்து, மாத்திரைகள் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாக சி.பி.ஐ. போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதன் அடிப்படையில், கடந்த வாரம் சி.பி.ஐ. அதிகாரிகள் மருந்து குடோனில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது மருந்து குடோனை நிர்வகிக்கும் உயர் அதிகாரிகள் விடுமுறையில் சென்றிருந்தனர். இதனால் குறிப்பிட்ட ஒரு அறையை ‘சீல்’ வைத்துவிட்டு சென்றனர். நேற்று பிற்பகல் 1.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரை சி.பி.ஐ. அதிகாரிகள் 6 பேர், மருந்து குடோனில் 2 ஆவது முறையாக சோதனை நடத்தினார்கள்.

நேற்று உயர் அதிகாரிகள் பணிக்கு வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில், ‘சீல்’ வைக்கப்பட்ட அறையை திறந்து சோதனை போட்டனர். ஒரு உயர் அதிகாரியிடம் தனி அறையில் வைத்து நீண்டநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

வெளியூர் பயணம்  இப்போதைக்கு போகக்கூடாது என்றும், தேவைப்பட்டால் சி.பி.ஐ. அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் குறிப்பிட்ட ஒரு உயர் அதிகாரியிடம் மட்டும் வலியுறுத்திவிட்டு, சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றுவிட்டதாக  தெரிகிறது.

தொடர்ந்து இரண்டு முறை சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!