ஹெல்மெட்: ஆண்களுக்கு அபராதம், பெண்களுக்கு சலுகையா?

சென்னை: ஹெல்மெட் அணியாமல் செல்லும் ஆண்களுக்கு அபராதம் விதிப்பதோடு, லைசென்ஸையும் பறிமுதல் செய்யும் காவல்துறையினர், பெண்களை கண்டும் காணாமல் விட்டு விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 

தமிழகத்தில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டத்தை தொடர்ந்து கடைகளில் கூடுதல் விலைக்கு ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க தொழிலாளர் நல அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளனர்.

சென்னையில் அதிகமாக ஹெல்மெட் விற்பனை செய்யப்படும் ராயப்பேட்டை, பிராட்வே,  அண்ணாநகர், அமைந்தகரை உள்ள கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டதோடு, அதிக விலைக்கு ஹெல்மெட்டுகளை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கவும் செய்தனர்.
 

இந்த சோதனை ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், மறுபக்கம் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிப்பதோடு, வாகனம் மற்றும் ஆவணங்கள், லைசென்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவதற்காக சென்னை எழும்பூரில் உள்ள நடமாடும் நீதிமன்றத்தில் வாகன உரிமையாளர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இன்று ஏராளமான இருசக்கர வாகன உரிமையாளர்கள் எழும்பூரில் குவிந்தனர். அவர்கள், ஐஎஸ்ஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டை, பில்லுடன் நீதிபதியிடம் காண்பித்து தங்களது வாகனத்தை எடுத்து செல்கின்றனர். அவர்களுக்கு நீதிபதி எச்சரிக்கையும் விடுக்கிறார்.
 

நூற்றுக்கணக்கான ஆண்கள் அபராதம் செலுத்த குவிந்திருந்த நிலையில், இதில் ஒரு பெண்ணை கூட பார்க்க முடியவில்லை. இது குறித்து அங்கிருந்த காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் ஏராளமானவர்கள் இங்கு குவிந்து வருகின்றனர். அவர்கள் மத்தியில் பெண்கள் நின்றால் ஒருவகையான மனஉளைச்சல் ஏற்படும் என்பதற்காக, ஹெல்மெட் அணியாமல் செல்லும் பெண்களை நாங்கள் பிடிப்பது கிடையாது. இதையே சாக்காக வைத்து பெண்கள் ஹெல்மெட் அணியாமல் செல்லக் கூடாது. இனி ஹெல்மெட் அணியாமல் பெண்கள் சென்றால் அவர்களை பிடித்து அபராதம் விதிப்போம்" என்றார்.

படங்கள்: வேங்கடராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!