சர்க்கரை நோயாளிகள் வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்கள் தான்: உயர் நீதிமன்றம் அதிரடி!

சென்னை: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வேலைவாய்ப்புக்குத் தகுதியானவர்கள்தான் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக கூறி உள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு ரயில்வேயில் காலியாக உள்ள குரூப் 'டி' பணியிடங்களை நிரப்ப ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

அதன் பின்னர், அந்தப் பணியிடங்களுக்கு இறுதியாக சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனைகளுக்காக 4,232 பேர் தேர்வாகினர். அதில், 58 பேர் மருத்துவப் பரிசோதனையில் தேர்ச்சி பெறவில்லை. அதில் புஷ்பம் என்பவரும் தேர்வாகவில்லை.

இதையடுத்து, தான் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாய சென்னை கிளையில் புஷ்பம் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், புஷ்பத்துக்கு 12 வாரங்களுக்குள் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, ரயில்வே நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்நிலையில், அந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன், டி.மதிவாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது.

அப்போது, விசாரணைக்கு பின் நீதிபதிகள், ''ரயில்வே நிர்வாகம், எதிர்மனுதாரருக்கு சர்க்கரை நோய் இருப்பதாகக் கூறி பணி நியமன ஆணை வழங்க மறுத்துள்ளது. சர்க்கரை நோயால் ஒருவரது பணித்திறன் பாதிக்கும் என்று எந்தவித அறிவியல்பூர்வமான ஆதாரங்களும் இல்லாதபோது, மனுதாரரின் வாதத்தை ஏற்க இயலாது.

இந்திய சர்க்கரை நோய் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்தியாவில் சுமார் 4 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா தற்போது சர்க்கரை நோயின் தலைநகரமாக மாறி வருகிறது. அதனால், சர்க்கரை நோயாளிகள் வேலைவாய்ப்பை பெற முடியாதவர்கள் என்பதை ஏற்க இயலாது" என்றனர்.

மேலும், அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், புஷ்பத்துக்கு 8 வாரங்களுக்குள் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!