Published:Updated:

`5 கலர்களில் அட்டை.. அவசரத் தேவைக்கு வாட்ஸ்அப்!’ -மஞ்சள் மண்டலம் காஞ்சியில் கடும் கட்டுப்பாடுகள்

 ஐந்து வண்ணங்களில் அட்டைகள்
ஐந்து வண்ணங்களில் அட்டைகள்

`ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ஒரு அட்டை வீதம் ஐந்து அட்டைகள் கொடுக்கப்பட உள்ளன. அட்டையில் குறிப்பிட்ட நாள்களைத் தவிர வேறு நாள்களில் வெளியே செல்ல அனுமதி இல்லை’ - காஞ்சிபுரம் ஆட்சியர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் மஞ்சள் மண்டலப் பகுதியாக இருந்து வருகிறது காஞ்சிபுரம். இதுவரை 8 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு கட்டுபாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். வியாபாரிகளுக்கு வெள்ளை நிற அட்டையும், பொதுமக்களுக்கு ஐந்து வண்ணங்களில் அட்டைகளும் கொடுக்கப்பட உள்ளன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, “காஞ்சிபுரம் நகராட்சியில் உள்ள 51 வார்டுகளில், கொரோனா தொற்று காரணமாக 9 வார்டுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறிச் சந்தை, ரயில்வே சாலையில் செயல்பட்டு வந்த மளிகைக் கடை ஆகியவை வையாவூர் மற்றும் ஓரிக்கை பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. கொரோனா தொற்றின் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குக் காஞ்சிபுரம் நகராட்சி மூலம் நடமாடும் காய்கறிக் கடைகள், மளிகைப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதுபோல் குடிநீர், சுகாதாரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க நகரத்தின் மற்ற 42 வார்டுகள் அடங்கிய பகுதிகள் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 42 வார்டுகளும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுக் கண்காணிப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மளிகைக் கடைகள், பால், தண்ணீர், ஏ.டி.எம் போன்றவை இருக்கும் இடங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. காய்கறி, தண்ணீர், பால், போன்ற பொருள்களைத் தினமும் எடுத்துச் செல்லும் வகையில் வியாபாரிகளுக்கு வெள்ளை நிற அட்டை வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா

பொதுமக்கள் வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டும் தங்களின் அத்தியாவசியப் பொருள்களை வாங்க வெளியில் சென்று வரும் வகையில் அவர்களுக்கு இளஞ்சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை, ஆரஞ்சு ஆகிய ஐந்து வண்ணங்களை அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ஒரு அட்டை வீதம் ஐந்து அட்டைகள் கொடுக்கப்பட உள்ளன. அட்டையில் குறிப்பிட்ட நாள்களைத் தவிர வேறு நாள்களில் வெளியே செல்ல அனுமதி இல்லை. பொதுமக்கள் தங்கள் வார்டுகளை உள்ளடக்கிய மண்டலப் பகுதிகளில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை தங்கள் மண்டலத்தில் மட்டுமே வாங்கிக்கொள்ள வேண்டும். மருத்துவ சேவை போன்ற இன்றியமையாத தேவைகளுக்கு அட்டையில் உள்ள வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டால் உடனடியாக அவர்களுக்குத் தேவையானவற்றை உடனடியாகச் செய்து கொடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு