Published:Updated:

முழு ஊரடங்கு: 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு; ரூ.200 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிப்பு

தீப்பெட்டி உற்பத்தி
தீப்பெட்டி உற்பத்தி

தமிழகத்தில் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 2,300-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டன. இதனால், 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்ததுடன், சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி நடந்துவருகிறது. 50 முழு இயந்திரத் தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், 400 பகுதி நேர இயந்திரத் தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், 2,300 சிறு தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் இயங்கிவருகின்றன. இந்தத் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களில், 80 சதவிகிதத் தொழிலாளர்கள் பெண்கள்தான். தீப்பெட்டி உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளே தீக்குச்சிதான்.

தீப்பெட்டி உற்பத்தி
தீப்பெட்டி உற்பத்தி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட தீக்குச்சி தயாரிக்கும் ஆலைகள் இயங்கிவருகின்றன. இந்தியாவில் உற்பத்தியாகும் தீப்பெட்டியில் 90 சதவிகிதம் தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலிருந்து தீப்பெட்டி தயாரிக்கத் தேவையான மரக்குச்சிகள், தீக்குச்சி தயாரிக்கத் தேவைப்படும் மரத்தடிகள், புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து பொட்டாசியம் குளோரேட் ஆகிய மூலப் பொருள்கள் கிடைத்துவந்தன. தற்போது அந்த மாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், தீப்பெட்டி உற்பத்தி செய்வதற்குத் தேவையான மூலப்பொருள்கள் வரத்து இன்றி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், பல வடமாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளதால் தீப்பெட்டிக்கான ஆர்டர்களும் வரவில்லை, இதனால் இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகளை மூடுவதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளதன்படி தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இது குறித்து கோவில்பட்டியைச் சேர்ந்த நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சேதுரத்தினத்திடம் பேசினோம். ”தீப்பெட்டி உற்பத்தியில் தீக்குச்சி உற்பத்திக்குத் தேவையான மரத்தடிகள், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படுகின்றன.

மூடப்பட்ட தீப்பெட்டி ஆலை
மூடப்பட்ட தீப்பெட்டி ஆலை

இதுதவிர, வெளிநாடுகளிலிருந்தும் சில வகை மரத் தடிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆலைகளில் மரத் தடிகளை அறுவை இயந்திரம் மூலம் ஒரு அடி நீளத்துக்கு அறுத்து, அதன் பட்டைகளை நீக்கிய பின்னர், குச்சியாக்கும் இயந்திரம் மூலம் குச்சிகள் தயாரிக்கப்பட்டு தீப்பெட்டி ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. பின்னர், குச்சிகளில் மருந்து ஒட்ட வைக்கப்பட்டு, பெட்டிகளில் அடைக்கப்பட்டு, பண்டல்களாக விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி பண்டல்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கப்பல்களில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தீப்பெட்டிக்காக அந்த மாநிலங்களிலிருந்து பெரிய அளவில் ஆர்டர்கள் ஏதும் வரவில்லை. அத்துடன், தீக்குச்சி, மரத்தடி, பொட்டாசியம் குளோரேட் மூலப்பொருள்கள் வருவது தடைப்பட்டுள்ளது.

ஆலைகளின் குடோன்களின் தேங்கிய தீப்பெட்டி பண்டல்கள்
ஆலைகளின் குடோன்களின் தேங்கிய தீப்பெட்டி பண்டல்கள்

இதனால், தீப்பெட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நாளை முதல் வரும் 24-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள பகுதி இயந்திர தீப்பெட்டி ஆலைகள், அதன் சார்பு ஆலைகள் என 2,300 ஆலைகள் மூடப்படுகின்றன. இதனால் சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்படுவது மட்டுமன்றி, சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்றார். ”இந்தத் தீப்பெட்டித் தொழிலுல கிடைக்குற வருமானத்தைவெச்சுதான் குடும்பத்துல வயித்துப்பாட்டைக் கழிச்சிட்டு வந்தோம். ஒரு நாளு வேலை இல்லன்னாலே கஷ்டமாயிடும். ஊரடங்கால 15 நாளு கம்பெனிய மூடிட்டாங்க. குடும்பச் செலவுகளுக்கு என்ன செய்யப்போறோம்னு தெரியலை. எங்களைப் போன்ற அன்றாடங்காச்சிகளுக்கும் அரசு உதவணும்” என்கின்றனர் தீப்பெட்டித் தொழிலாளர்கள்.

அடுத்த கட்டுரைக்கு