Published:Updated:

`எங்கள் வாழ்வாதாரத்தை சிதைச்சுடாதீங்க!' - விழுப்புரத்தோடு இணைக்கக் கோரும் 5 கிராம மக்கள்

அறிவிப்பு வந்ததிலிருந்தே ஐந்து கிராம மக்கள் ஒன்றிணைந்து பல போராட்டங்களை நடத்திவருகின்றனர். கையெழுத்து இயக்கம் நடத்தி, விழுப்புரத்தோடு இணைக்க வேண்டும் என்று சுமார் 75,000 பேர் கையொப்பமிட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

Protest
Protest

தமிழக அரசு சமீபகாலமாக பெரிய மாவட்டங்களை இலகுவான முறையில் நிர்வகிப்பதற்காக இரண்டு மாவட்டங்களாகப் பிரித்து வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரம் ஒரு மாவட்டமாகவும் கள்ளக்குறிச்சி மற்றொரு மாவட்டமாகவும் ஆக்கப்பட்டது. அப்போது, விழுப்புரத்துக்கு அருகில் உள்ள திருவெண்ணைநல்லூர், அரசூர், திருக்கோவிலூர், பேரங்கியூர் ஆகிய கிராமங்களைக் கள்ளக்குறிச்சியோடு இணைக்க அரசுத் தரப்பிலிருந்து அறிவிப்பு வந்தது. இந்த அறிவிப்பு அந்தப் பகுதி கிராம மக்களிடையே கடும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.

Protest
Protest

இந்தச் சம்பவம் தொடர்பாக, அரசூர் மக்கள் கூறுகையில், ``அரசூரிலிருந்து விழுப்புரம் வெறும் பத்து கிலோமீட்டர்தான் ஆனால், கள்ளக்குறிச்சிக்கு 40 கிலோமீட்டர் தூரம். இதனால் பலருக்கு வேலை பறிபோகும் அபாயம் உள்ளது. மார்க்கெட்டிங் நிறுவனம், கூட்டு நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு பணி அமர்த்தப்படுபவர்கள் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. எங்கள் ஊரிலிருந்து கள்ளக்குறிச்சி 40 கிலோ மீட்டர் தொலைவு. விழுப்புரம் மாவட்டத்தில் வேலை பார்க்கலாம் என்றால் சில நிறுவனங்கள் நீங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறுவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது '' என்றனர். இது சம்பந்தமாக அரசு அதிகாரிகளிடம் பேசினால், அவர்கள் தரப்பிலிருந்து முறையான பதில் வருவதில்லை என வருந்துகின்றனர் கிராம மக்கள்.

அறிவிப்பு வந்ததிலிருந்தே 5 கிராம மக்கள் ஒன்றிணைந்து பல போராட்டங்களை நடத்திவருகின்றனர். கையெழுத்து இயக்கம் நடத்தி, விழுப்புரத்தோடு இணைக்க வேண்டும் என்று சுமார் 75,000 பேர் கையொப்பமிட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளனர். திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் ஒருநாள் கடை அடைத்து, ஆட்டோ, டாட்டா ஏஸ் போன்ற வாகனங்கள் இயக்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிகழ்வில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி பங்கேற்றார். ம.தி.மு.க, வி.சி.க போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பேரங்கியூரில் 5 கிராம மக்கள் சார்பாக நடத்திய போராட்டத்தில் சுமார் 30 இளைஞர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.

Protest
Protest

அதை எதிர்த்து, வரும் 28-ம் தேதி திருக்கோவிலூரில் வணிகர் சங்கம் சார்பாக கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

``எங்களது வாழ்வாதாரத்தையும் சுதந்திரத்தையும் அரசு சிதைத்துவிட வேண்டாம். விழுப்புரம் மாவட்டதோடு எங்கள் கிராமங்களை இணைத்துவிடுங்கள்'' எனக் கவலையோடு பேசுகிறார்கள் கிராம மக்கள்.