திருப்பத்தூர் சகாயம் நகரைச் சேர்ந்தவர் ஆஷா. இவரின் 5 வயது மகன் ஜெனோ ஃபிராங்க்ளின், தனியார் பள்ளியில் யூ.கே.ஜி படிக்கிறார். தமிழர்களின் தற்காப்பு வீரக்கலைகளில் ஒன்றான சிலம்பக் கலையில் ஆர்வம் மிகுந்து காணப்படும் ஜெனோ ஃபிராங்க்ளின் `பாரத் குரூப் ஆஃப் இன்ஸ்டிட்யூஷன்ஸ்’ என்ற வீர விளையாட்டுக் கலைக்கூடத்தில் இரண்டரை வயதிலிருந்து பயிற்சி எடுக்கிறார். கடும் பயிற்சி, விடா முயற்சியால் ஜெனோ ஃபிராங்க்ளின் சிலம்பப் போட்டிகளில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளைக் குவித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு 12 பானைகள் மீது நின்றபடி தொடர்ந்து 20 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி சாதனைப் படைத்தார். அவரது திறமையை `நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ அமைப்பு, 5 வயதிற்கு உட்பட்ட சிறுவர் பிரிவினருக்கான உலக சாதனையாகப் பதிவு செய்தது. சான்றிதழ், பதக்கம், கேடயம் வழங்கி அந்தக் குழுவினர் சிறுவனை உற்சாகப்படுத்தி மேலும் ஊக்கப்படுத்தினர். இதையடுத்து, 30 பானைகள் மீது ஏறி நின்று தொடர்ந்து 1 மணி நேரம் சிலம்பம் மற்றும் மான் கொம்பு சுற்றி, சாதனை படைத்தார் ஜெனோ ஃபிராங்க்ளின். இதுவும், `இன்டர்நேஷனல் ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில், உலக சாதனையாகப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையில் சிலம்பம் சுற்றிக்கொண்டு பின்நோக்கி நடந்தபடியே புதிய சாதனையை நிகழ்த்தி அசத்தினார் ஜெனோ ஃபிராங்க்ளின். அதோடு, 30 பானைகள் மீது அமர்ந்து யோகாசனம் மற்றும் 30 நிமிடங்கள் சுருள் வாள் வீச்சிலும் சாதனை புரிந்திருக்கிறார். `ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ என்ற தனியார் அமைப்பும், சிறுவனுடைய சாதனைகளை மூன்று உலக சாதனைகளாக இடம் பெறச் செய்திருக்கிறது.

ஐந்து வயதிலேயே 5 உலக சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் சிறுவன் ஜெனோ ஃபிராங்க்ளினைப் பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள். திருப்பத்தூரிலிருக்கும் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகைக்கு வந்திருந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஜெனோ ஃபிராங்க்ளினைத் தூக்கி வைத்து கொஞ்சினார். மேலும், பல்வேறு சாதனைகளைக் குவிக்க வேண்டும் என்று வாழ்த்திய அமைச்சர், பத்தாயிரம் ரூபாயை கொடுத்தும் ஊக்கப்படுத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹாவும் ஜெனோ ஃபிராங்க்ளினை அழைத்துப் பாராட்டினர். தொடர்ந்து, அடுத்த சாதனைக்காகவும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் ஜெனோ ஃபிராங்க்ளின்.