Published:Updated:

தூத்துக்குடியில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று! -சமூகப் பரவல் அச்சத்தில் மக்கள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனை
தூத்துக்குடி அரசு மருத்துவமனை

தூத்துக்குடியில், ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாலும், கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்ததாலும் சமூகப் பரவலாக மாறிவிட்டதோ என பொதுமக்கள் மத்தியில் கேள்வியும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை முதலில், டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாநாட்டிற்கு தூத்துக்குடியிலிருந்து சென்று வந்தவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை
தூத்துக்குடி அரசு மருத்துவமனை

மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன. இதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 71 வயது மூதாட்டி தவிர மற்றவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தொடர்ந்து 10 நாள்கள் வரை ஒருவர்கூட கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால், சிவப்பில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு முன்னேறியது.

இந்நிலையில், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, அடுத்தடுத்த நாள்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 16,536 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 487 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ளோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சந்தீப் நந்தூரி - மாவட்ட ஆட்சியர்
சந்தீப் நந்தூரி - மாவட்ட ஆட்சியர்

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் தூத்துக்குடியைச் சேர்ந்த 7 பேர், வெளி மாவட்டங்களிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த 43 பேர் என 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை, நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், தூத்துக்குடியில் கொரோனா தொற்று சமூகப்பரவலாக மாறியுள்ளதா என்ற கேள்வியும் அச்சமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரியிடம் பேசினோம், ``சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் கடந்த மே மாதத்தில் மட்டும் 22,345 பேர் தூத்துக்குடிக்கு வந்துள்ளனர். இவர்களில் 162 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தினமும் 200 முதல் 300 பேர் வரை கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுவருகிறது. தமிழகத்திலேயே தூத்துக்குடியில் முதல்முறையாக நடமாடும் ரத்தப்பரிசோதனை மையம் ஏற்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 பேர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை
தூத்துக்குடி அரசு மருத்துவமனை

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காகக் கூடுதலாக ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் மற்றுமொரு பரிசோதனைக்கருவி நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியிலுள்ள 3 தனிமை முகாம்களிலும் கூடுதலாக 150 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. போலியான இ-பாஸ் மூலம் தூத்துக்குடிக்கு வருவோரை `க்யூ-ஆர் கோடு’ ஸ்கேன் மூலம் சோதனைச் சாவடிகளில் அடையாளம் கண்டுகொள்கிறோம். இவ்வாறு, போலியான இ-பாஸ் அல்லது முறையான அனுமதிச்சீட்டு இல்லாமல் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடியில் சமூகப்பரவல் இல்லை. எனவே, மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு