Published:Updated:

இடஒதுக்கீடு: `சட்டரீதியாகத் தடை இல்லை; 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்!’ - உயர் நீதிமன்றம்

மருத்துவ படிப்பு
மருத்துவ படிப்பு

மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கலாம் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15% இடங்களும் மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் மருத்துவ மேற்படிப்பு இடங்களில், ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடகோரி தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசு சார்பில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது.

மருத்துவம்
மருத்துவம்

அதைத்தொடர்ந்து அனைத்துக் கட்சிகள் மற்றும் தமிழக அரசும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன. உயர் நீதிமன்றத்தில், இந்த மனுக்களை நீதிபதி ஏ.பி சாஹி, நீதிபதி செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வந்தது. முன்னதாக நடந்த விசாரணையில், அந்தத்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கும் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை வகுத்திருப்பதாகத் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் விதி உள்ளது, தகுதி அடிப்படையில் மட்டுமே மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. அதே நேரம், இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கு முழு உரிமை உள்ளது என அரசியல் கட்சிகள் தரப்பில் வாதிடப்பட்டது.

கடந்த சில மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்களும் முழுமையாக நிறைவடைந்து இன்று இதில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது இதை நிராகரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், அது 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

மத்திய கல்விநிலையங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வரும்போது மாநிலங்கள் வழங்கும் இடங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என்ற விஷயத்தை ஏற்க முடியவில்லை, மத்திய கல்விநிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஓபிசி இடஒதுக்கீடு வழங்க சட்டரீதியாகவோ, அரசியலமைப்பு ரீதியாகவோ எந்த தடையும் இல்லை என கூறி இது தொடர்பாக மத்திய அரசு 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு