Published:Updated:

`ட்ரோன்' மூலம் கிருமி நாசினி; 500 உள்நோயாளிகள் வெளியேற்றம்? - அரசு மருத்துவமனைகளில் அதிரடி #Corona

ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்ற மக்கள் ஊரடங்கிற்கு நாடு முழுவதும் ஒத்துழைப்பு கிடைத்தது. அன்றைய தினம் தமிழகத்தில் ராட்சத ஜெட்ராடிங் இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சிப் பகுதியில் 75 ஜெட் ராடிங் இயந்திரங்கள் மற்றும் பவர் ஸ்பிரேயர இயந்திரங்கள் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது. இதன்காரணமாக சென்னையிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலம் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

144 தடை... பொது இடங்களில் குவியும் மக்கள் கூட்டம்... கட்டுக்குள் வருமா கொரோனா?
கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம்
தே.அசோக்குமார்

கோயம்பேடு பஸ் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. போதிய பஸ் வசதியில்லாததால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். பஸ்களின் வாசல் வழியாக செல்ல முடியாத இளைஞர்கள் சிலர் ஜன்னல் வழியாக ஏறி பஸ்க்குள் சென்றனர். கோயம்பேடு பஸ் நிலையத்தை தவிர, தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டவர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். சென்னையிலிருந்து திருச்சி வரை பஸ்கள் இயக்கப்பட்டதால் மதுரை, நெல்லை, தூத்துக்குடிக்குச் செல்லவேண்டியவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், “புரசைவாக்கத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கும் திருப்பூரைச் சேர்ந்த 48 வயது நபருக்கும் மதுரையைச் சேர்ந்த 54 வயது நபருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவக்கண்காணிப்பில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கை வசதிகள் கொண்ட தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

`மக்கள் வெள்ளத்தில் கோயம்பேடு!’ - சென்னை டு திருச்சி வரை மாநகரப் பேருந்துகள் இயக்கம்

இதனால் சிறப்பு வார்டுகள் அமைக்கப்படும் கட்டடத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த உள்நோயாளிகள் உயர்தர சிறப்பு சிகிச்சை கட்டடத்துக்கு மாற்றப்பட்டனர். மேலும், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்நோயாளிகளாக உள்ளவர்கள், அறுவை சிகிச்சைக்காகவும், மேல் சிகிச்சைக்காகவும் தங்கி உள்ளவர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டான்லி அரசு மருத்துவமனை
ஸ்டான்லி அரசு மருத்துவமனை

அவர்கள் அனைவரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 31-ந்தேதிக்குப் பிறகு சிகிச்சைக்கு வரும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் பாலாஜி, ஆர்.எம்.ஓ.ரமேஷ் ஆகியோரிடம் நோயாளிகள் வெளியேற்றம் குறித்து விளக்கம் கேட்க போனில் பேசினோம். ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை. அவர்களின் விளக்கத்தையும் வெளியிட தயாராக உள்ளோம்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைப் பகுதியில் சோதனை முயற்சியாக ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். ட்ரோனில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரத்தின் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்தச் சோதனை முயற்சி வெற்றியடைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

`சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட 3,000 வீடுகள்!’ - `உள்ளே நுழையாதே’ ஸ்டிக்கர் ஒட்டும் மாநகராட்சி
ட்ரோன்
ட்ரோன்

கிருமி நாசினி மருந்து பொருத்தப்பட்டிருந்த ட்ரோன் புழுதியோடு தரையிலிருந்து மேலே பறந்தது. அதனால் அந்தப்பகுதி முழுவதும் புழுதி மண்டலமாக மாறியது. அதே நேரத்தில் ட்ரோனிலிருந்து கிருமி நாசினி மருந்து அந்தப்பகுதியில் தெளிக்கப்பட்டது. உயரமாக கட்டடத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

ட்ரோன் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிப்பு - ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை #FightCovid19 #CoronaVirus #Covid19Updates

Posted by COVID 19 Updates - Vikatan on Monday, March 23, 2020
அடுத்த கட்டுரைக்கு