ஆடிப்பெருக்கு விழாவுக்கு மேட்டூரிலிருந்து கூடுதல் நீர் திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை: ஆடிப் பெருக்கு விழாவினை தமிழக மக்கள் சீரோடும், சிறப்போடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடும் வண்ணம், மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் கூடுதலாக தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயம் செழிக்க வேண்டி காவேரி அன்னைக்கு மலர் தூவி வணங்கும் விழா எனப்படும் ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் ஒவ்வோரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், 3.8.2015 அன்று வருகின்ற ஆடிப் பெருக்கு விழாவினை தமிழக மக்கள் சீரோடும், சிறப்போடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடும் வண்ணம், மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்று காவேரி பகுதி மக்களிடமிருந்தும், விவசாயிகளிடமிருந்தும் எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு, மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீர்வரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, காவேரிப் பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் ஆடிப்பெருக்கினை கொண்டாடும் வகையில் 26.7.2015 முதல் 3.8.2015 வரை மேட்டூர் அணையிலிருந்து, தற்போது குடிநீருக்காக திறந்துவிடப்பட்டுள்ள 2000 கனஅடி நீருடன், கூடுதலாக வினாடிக்கு 4,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!