வெளியிடப்பட்ட நேரம்: 12:31 (01/08/2015)

கடைசி தொடர்பு:13:27 (01/08/2015)

கொடைக்கானலை மாசுபடுத்திய யூனிலீவர்: ராப் பாடல் மூலம் கேள்வி கேட்கும் பெண்! (வீடியோ இணைப்பு)

சென்னை: தமிழகத்தில் இயற்கை வளம் நிரம்பிய கொடைக்கானலில் பாதரசத்தைக் கொட்டி சுற்றுச் சூழலை அசுத்தமாக்கிய யூனிலீவர் கம்பெனியை கேள்வி கேட்கும் வகையில்  ராப் பாடல் ஒன்றைப்  பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் சென்னை பெண் சோஃபியா அஷ்ரஃப்.

இது யூடியூபில் தற்போது வைராலகி இருக்கிறது.யூ டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
      
நாம் நாள்தோறும் பயன்படுத்தும் சோப்பு, பற்பசை, எண்ணெய் போன்ற பொருட்களைத்  தயாரித்து வருகிறது ஹிந்துஸ்தான் யூனிலீவர் கம்பெனி.  இந்த நிறுவனம் கடந்த 1983ஆம்  ஆண்டு கொடைக்கானலில் பாதரச தெர்மா மீட்டர் தயாரிக்கும் ஆலையை நிறுவியது. சுமார் 3000 திற்கும் அதிகமானோர் இந்த ஆலையில் பணி புரிந்து வந்தனர்.

நாளடைவில் ஆலையில் இருந்து வெளியேறிய பாதரச கழிவுகளாலும், பாதரச லெட் வேதியியல் மாற்றங்களாலும் பல தொழிலாளர்கள் உடல் ரீதியாக பாதிப்படைய தொடங்கினர். . கடந்த 1983லிருந்து 2001 ஆம் ஆண்டு வரை, இதுபற்றியான விழிப்புணர்வே இல்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு 45 பேர் பரிதாபமாக  இறந்துள்ளனர். நாடு முழுவதும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் நடந்த பல போராட்டங்களுக்குப் பிறகு ஆலை மூடப்பட்டு, தெர்மா மீட்டர் தயாரிப்பும் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இன்று வரை 10,000 டன் பாதரச கழிவுகள் கொடைக்கானலில் அகற்றப்படாமலேயே உள்ளது என்பது கூடதல் அதிர்ச்சியாக உள்ளது. இதனால் கொடைக்கானலில் ஏராளமான குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மட்டுமின்றி மலையின் சூழலும், பழங்கள், காய்கறிகள் விளைச்சலும் பாதிப்படைந்துள்ளது. நீரும் நிலமும் நஞ்சாகி வருவதால் மக்கள் பெரிய அளவில் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

அந்த ஆலை ஏற்படுத்திய சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் போன்ற உள்ளிட்ட விசயங்களை இந்த ராப் பாடலில் சோஃபியா அஷ்ரஃப் பாடி அசத்தியுள்ளார்.

தான் கற்ற கலையினை சமூக,சுற்றுச்சூழல்  அவலங்களை அகற்றும் கருவியாக  மாற்றியதற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்