கலாமின் கனவுகளை நிறைவேற்ற புதிய அமைப்பு: உதவியாளர் பொன்ராஜ் தகவல்! | Kalam to fulfill the dreams of the new system: Assistant ponraj information!

வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (02/08/2015)

கடைசி தொடர்பு:14:53 (02/08/2015)

கலாமின் கனவுகளை நிறைவேற்ற புதிய அமைப்பு: உதவியாளர் பொன்ராஜ் தகவல்!

ராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் லட்சிய கனவுகளை நிறைவேற்றுவதற்காக புதிய அமைப்பு உருவாக்கப்படும் என அவரது உதவியாளர் பொன்ராஜ் கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாமின் உதவியாளர் பொன்ராஜ் நேற்று இரவு ராமேஸ்வரம் வந்திருந்தார். கலாம் நினைவாக அவரது இல்லத்தில் நடந்த நிகழ்சியில் பங்கேற்ற அவர், பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘டாக்டர் கலாமின் மறைவுக்கு பல்வேறு நாடுகளில் இரங்கல் கூட்டம் நடத்த கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. அவரது மறைவிற்காக நடத்தப்படும் கூட்டங்களை ‘லட்சிய கனவை விதைக்கும் கூட்ட’மாக நடத்த வேண்டும். அவர் விட்டு சென்ற லட்சிய கனவுகளை தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் வேண்டுகோள் வந்து கொண்டிருக்கின்றன.

கலாம் அவர்கள் மறைந்து 40-ம் நாள் நிகழ்சிக்கு பின்னர் இதற்கென புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படும். இந்த அமைப்பின் மூலம் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் நாட்டின் நீடித்த வளர்சிக்கு என தனி தனி அமைப்புகள் உருவாக்கப்படும். இந்த அமைப்பின் மூலம் மாணவர்களை, இளைஞர்களை தலைவர்களாக உருவாக்க முயற்சி மேற்கொள்வோம். நாடு முழுமைக்கும் கல்வி, ஆராய்ச்சி பணிகளில் மாணவர் பாசறை அமைத்து வளர்சியை நோக்கி செல்வோம்.

ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் அவரது 10 கட்டளைகளை கல்வெட்டுக்களாக நிறுவ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அங்கு வருபவர்கள் பயன் பெறும் வகையில் நூலகம் அமைக்க வேண்டும். டெல்லியில் கலாம் வசித்து வந்த வீட்டினை ‘அறிவுசார் கண்டுபிடிப்பு மைய'மாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளுக்காகவும், அறிவு விருத்திக்காகவும், சிவில் சர்வீஸ் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு உதவுவதற்காகவும் இந்த மையத்தை ஏற்படுத்த வேண்டும்.

அவர் எழுதிய புத்தகங்களும், அவருக்கு பிறர் வழங்கிய புத்தகங்களும் அவரது நிரந்தர சொத்தாக உள்ளது. இதனை மாணவர்கள், இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இந்த பேட்டியின்போது, பொன்ராஜுடன் கலாமின் பேரன் ஷேக் சலீம் உடன் இருந்தனர்.

-இரா.மோகன்

படம்: உ.பாண்டி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்