பேருந்து மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து விபத்து: இருவர் பலி?

தாம்பரம்: தாம்பரம் அருகே பேருந்துக்காக காத்திருந்தவர்கள் கூட்டத்தில் பேருந்து புகுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த 5 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் பலியானதாக கூறப்படும் நிலையில் சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருந்து வண்டலுார் நோக்கி அரசு நகரப்பேருந்து ஒன்று இன்று காலை 10 மணிக்கு சென்றுகொண்டிருந்தது. தாம்பரம் தாண்டி பெருங்களத்துார் அருகே உள்ள இணைப்பு பாலம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக பாலத்தின் கீழ் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வெளியூர் செல்ல பேருந்துகளுக்காக நின்றவர்கள் மீது மோதியது.

இதில் அங்கிருந்த பொதுமக்கள் துாக்கி எறியப்பட்டனர். பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் நசுங்கி இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் படுகாயமடைந்த 5 க்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்தை அடுத்து பொதுமக்கள் தாம்பரம் - பெருங்களத்துார் இணைப்பு பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு  செல்லும் பேருந்துகள் செல்ல முடியாமல், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் சாலைமறியல் தொடர்ந்ததையடுத்து காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பெருங்களத்துாரிலிருந்து சென்னை நோக்கி செல்லும் பேருந்துகள் பாதுக்காப்பாக அனுப்பிவைக்கப்பட்டன. இருப்பினும் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுககு செல்லும் பேருந்துகள் போக்குவரத்து சீராகாத நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

- தெய்வநாயகம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!