கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு: தமிழக அரசு வாதம்!

புதுடெல்லி: சிறையில் இருக்கும் கைதிகளை, நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை குறைக்கப்பட்டு,  ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறையில் இருக்கும் கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில், அவர்களுக்கான தண்டனையை குறைக்கவோ, விடுதலை செய்யவோ, மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று வாதாடினார்.

சட்டப்பேரவையில், அனைத்து உறுப்பினர்களும் ஒரு தீர்மானத்தை கூட்டாக முன்மொழியும்போது, மாநில அரசு தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி, சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய சட்டத்தில் வழி உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார், அதிகார பகிர்வில் மாநில அரசை விட, மத்திய அரசுக்குதான் கூடுதல் அதிகாரம் உள்ளது என வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து பிற்பகலில் தமிழக அரசு வழக்கறிஞர் மீண்டும் தனது வாதத்தை முன்வைத்தார். அப்போது, கருணை மனுக்கள் மீது ஆளுநர், குடியரசுத் தலைவர் எத்தனைமுறை வேண்டுமானாலும் முடிவெக்கலாம். முடிவு எடுக்கும் அதிகாரத்தை இத்தனை முறை என்று சுருக்கிவிடக்கூடாது. ஆலோசனை அவசியம் எனில் ஓராண்டில் 23 லட்சம் வழக்குகளில் ஆலோசனை பெற வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!