சசிபெருமாள் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்!

சேலம்: மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்தி உயிரிழந்த காந்தியாவதி சசிபெருமாள் உடலை வாங்க அவரின் உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமையன்று அவரது உடல் அடக்கம் நடைபெற உள்ளது.

சேலம் அருகே உள்ள சசிபெருமாள் சொந்த ஊரான மேட்டுக்காட்டில் அவரின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுக்காட்டில் சசிபெருமாள் உறவினர்கள் நடத்தும் மதுவிலக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்   ஜி.ராமகிருஷ்ணன்,விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

கடந்த மாதம் 31ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள, உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி, காந்தியவாதி சசிபெருமாள் அங்கிருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது திடீரென மரணம் அடைந்தார்.

இதையடுத்து, தமிழகத்தில் நெடுஞ்சாலை மற்றும் பள்ளி, கோவில்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக மூட வேண்டும். மேலும், மதுவிலக்கு குறித்த அறிவிப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சசிபெருமாள் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வந்தனர்.

இந்நிலையில், உடலை நீங்கள் வாங்காவிட்டால், நாங்களே அடக்கம் செய்வோம் என காவல்துறை தரப்பில் இருந்து சசிபெருமாள் உறவினர்களுக்கு சம்மன் முடிவு செய்யப்பட்டிருப்பதாகச் செய்தி வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்   ஜி.ராமகிருஷ்ணன்,விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்உள்ளிட்டோர் இன்று சசிபெருமாள் உறவினர்களை நேரில் சந்தித்து, சசிபெருமாள் உடலை காவல்துறையினர் அடக்கம் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துவிடக்கூடாது என்று கூறி,  உடலை பெற்றுக்கொள்ள சம்மதிக்க வைத்தனர்.

அவர்கள் விடுத்த வேண்டுகோளை சசிபெருமாள் உறவினர்கள் ஏற்றுக்கொண்டதையடுத்து, உடலை பெற்றுக்கொள்வதற்காக வைகோ உள்ளிட்டவர்களுடன் சசிபெருமாளின் சகோதரர் செல்வம், மகன் நவநீத கிருஷ்ணன், மகள் கவியரசி ஆகியோர் ஆசாரிப்பள்ளம்  செல்கின்றனர்.

உடல் அடக்கம்

சசி பெருமாள் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் நாளை சசிபெருமாளின் உடல் அடக்கம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!