வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (11/08/2015)

கடைசி தொடர்பு:20:35 (11/08/2015)

தோல்வியை ஏற்கும் மனப்பக்குவத்தை இளைஞர்கள் கற்க வேண்டும்: சைலேந்திர பாபு

சைலேந்திர பாபு I.P.S, தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர். கோபிச்செட்டிபாளையத்தில், காவல்துறை உதவி கண்காணிப்பாளராக (ADSP) 1989ல் காவல்துறை பணியை தொடங்கிய சைலேந்திர பாபு, தனது பணிகளுக்கிடையே தொடர்ந்து மாணவர்களிடையேயும், இளைஞர்களிடமும் எழுச்சி உரைகளை நிகழ்த்துவதை ஒருபோதும் நிறுத்துவதில்லை.

இப்படி, கடந்த சனிக்கிழமை அவர் உரையாற்றியது ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலுள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில். கல்லூரியின் self development cell ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், 'உன்னை உச்சியில் பார்' (See you at the top) என்ற தலைப்பில், 3,500 மாணவர்கள் முன், அவர்களின் வாழ்க்கை கடமைகள் பற்றியும், தங்கள் பெற்றோரின் தியாகங்கள் பற்றியும் சுமார் இரண்டு மணி நேரம் உரையாற்றினார்.

அந்த நிகழ்ச்சி முடிந்ததும் திருச்சி புறப்பட்டவரின் அம்பாசிடர் காரில் நாமும் பயணித்து சில கேள்விகளை அடுக்கினோம். மதுவிலக்குப் போராட்டம், மரண தண்டனை பற்றியக் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டாலும், மற்ற கேள்விகளுக்குப் பொறுமையோடும் புன்சிரிப்போடும்  பதிலளித்தார்.

இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நிணைக்கிறீர்கள்?

இளைஞர்கள்,  சமுதாயமும் குடும்பமும் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நாம் என்ன செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். தன் பண்புகளை இளைஞர்கள் ஆராய்ந்து, அவற்றை சரி செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு இளைஞனும் ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை  பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் மன்னிக்கப்படக் கூடாதவர்கள்.

சேவையாக செய்ய வேண்டிய IAS போன்ற பணிகள் கௌரவம் தரும் வேலையாக மாறி வருவதை ஆரோக்கியமானதாக கருதுகிறீர்களா?

இந்த வேலையில் கௌரவம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் நிறைய ஆபத்துக்களும் உள்ளன. கௌரவத்திற்காக யாரும் ஆபத்தை விலைக்கு வாங்கப் போவதில்லை. ஒருசிலர் அப்படி பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் ஆசைப்படுகிறார்கள். அவர்களால் கண்டிப்பாக பிரச்னைகள் உண்டாகும். ஆனால், இன்றைய இளைஞர்கள், இந்தப் பணியின் பொறுப்பால் ஈர்க்கப்பட்டுள்ளனர். நான் பார்த்த இளைஞர்கள் பலர் மிகவும் ஈடுபாட்டோடு உள்ளனர். அதனால் இதை நான் ஒரு நல்ல விஷயமாகத்தான் பார்க்கிறேன். இளைஞர்கள் இன்னும் அதிகமாக இதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

விவசாயக் கல்லூரி மாணவரான நீங்கள், உங்கள் ஓய்விற்குப் பிறகு விவசாயம் செய்யும் எண்ணம் உள்ளதா?

என் ஓய்விற்கு இன்னும் அதிக காலம் உள்ளது. அதைப் பற்றியும், விவசாயம் செய்வதைப் பற்றியும் இதுவரை நான் யோசிக்கவில்லை. உங்களின் இந்த யோசனைக்கு நன்றி. விவசாயம் பார்க்கலாம், விவசாயிகளுக்கு நவீன முறைகள் பற்றிய ஆலோசனைகள் கொடுக்கலாம். ஊரில் கொஞ்சம் நிலம் கூட உள்ளது. விவசாயம் செய்வது பற்றி கண்டிப்பாய் யோசிக்கிறேன்.

இந்திய தடகள அணியின் மேலாளராக இருந்துள்ளீர்கள். சீனா, ஜமைக்கா போன்ற நாட்டவர்களோடு ஒப்பிடுகையில் நம் வீரர்களிடம் இல்லாத அந்த 'X factor' என்ன?

தடகளம் வெறும் விளையாட்டு அல்ல. அது நம் வாழ்வை மேம்படுத்தும். உடலுக்கு உறுதியும் வலிமையும் கொடுக்கும். ஆனால், நம் நாட்டில் அதை விளையாட்டாக கூட யாரும் பார்ப்பதில்லை. கிரிக்கெட்டிலும், தொலைக்காட்சியிலும் காட்டும் ஆர்வத்தை, அவர்கள் தடகளம் போன்ற விளையாட்டுகளில் காட்டுவது இல்லை. ஆஸ்திரேலிய மக்களில் 90 சதவிகிதம் பேருக்கு, கடலில் நீச்சலடிக்கத் தெரியும். நம்மில் எத்தனை பேரால் கடலில் நீந்த முடியும்? தன்னைப் பார்க்கவும், தன்னை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கவும் யாரும் இல்லையென்றால், அவன் யாருக்காக களத்தில் ஓட வேண்டும்? மக்கள் அனைத்து விளையாட்டுகளுக்கும் ஆதரவு அளித்தால்தான் அவர்களால் சிறப்பாய் செயல்பட முடியும்.

பல பள்ளிகளில் பெண்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சிகள் தர நடவடிக்கை எடுத்தீர்கள். இந்த சமுதாயத்தில் அவர்களின் பாதுகாப்பிற்கு அது மட்டும் போதுமா?

பெண்களுக்குப் பிரச்னை என்பது எல்லா இடங்களிலும் உண்டு. அவர்களின் வீட்டிலும், அவர்கள் வாழப்போகும் வீட்டிலும் கூட பிரச்னைகள் உண்டு. எப்போது அவர்களால் சுயமாக சம்பாதித்து சுயமாய் நிற்க முடிகிறதோ, அதுதான் அவர்களுக்கு மிகப்பெரிய பாதுகப்பு. அப்போதுதான் அவர்களுக்கும் மதிப்பு. ஆண்களும், பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அது தானாக வரவேண்டும். பெண்ணை பெண்ணாக மட்டும் பார்க்க வேண்டும்.

நீங்கள் மிகவும் ரசித்த, இப்படி ஒருவனை எதிர்கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்பிய ஒரு தமிழ் சினிமா வில்லன்?

அதிகம் நான் சினிமா பார்ப்பதில்லை. அவ்வப்போது குடும்பத்தோடு படங்களுக்குப் போவதுண்டு. சாமி, காக்க காக்க போன்ற போலீஸ் படங்கள் மிகவும் பிடிக்கும். சமீபத்தில் காக்கா முட்டை பார்த்தேன். மிகவும் அற்புதமான படம். சினிமாவில் வருவதைவிட பயங்கரமான வில்லன்களை நிஜ வாழ்க்கையில் நான் பார்த்திருக்கிறேன். நாங்கள் பல சவால்களை சந்தித்துள்ளோம். அதைவிடப் பெரிய சவால்கள் இன்னும் காத்திருக்கின்றன.

இடைவிடாத பணிகளுக்கு மத்தியிலும் பல புத்தகங்கள் எழுதியுள்ளீர்கள். இந்த ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?

ஆரம்ப காலங்களில் நான் மாணவர்களுக்கு மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு சில மாணவர்கள் என்னிடம், 'இப்படி பல இடங்களில் பேசுவதற்குப் பதில் ஒரு புத்தகம் எழுதலாமே' என்றனர். அதுவுமில்லாமல் ஏற்கனவே எனக்கு எழுதும் பழக்கம் இருந்ததால், புத்தகம் எழுதத் தொடங்கினேன். இளைஞர்களுக்கு நான் சொல்ல வேண்டிய அனைத்தையும் இதுவரை புத்தகமாய் எழுதியிருக்கிறேன், எழுதிக் கொண்டும் இருக்கிறேன்.

சுயசரிதை எழுதும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா?


இல்லை... இல்லை. சுயசரிதை எழுதும் அளவிற்கு இதுவரை நான் ஒண்ணும் சாதித்துவிடவில்லை. அவையெல்லாம் சாதாரனம்தான். தமிழ் இலக்கியம் படிக்கவும், இன்னும் பல புத்தகங்கள் எழுதவும் ஆசை உள்ளது. ஆனால், சுயசரிதை எழுதும் எண்ணம் எப்போதும் தோன்றியதில்லை.

நீங்கள் காக்கிச் சட்டை அணிந்ததற்காக மிகவும் பெருமைப்பட்ட தருணம் எது?

1997ல் சிவகங்கையில் சில காவல்துறையினருடன் செல்லும்போது, ஏற்கனவே பாலத்திலிருந்து பேருந்து ஒன்று ஏரிக்குள் விழுந்திருந்தது. நாங்கள் போவதற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்னரே அது விழுந்திருக்க வேண்டும். பேருந்தின் பெரும்பகுதி மூழ்கியிருந்தது. ஏற்கனவே பலர் தண்ணீரில் மூழ்கி இறந்திருந்தனர். என்னுடன் வந்திருந்த அனைவரும் சிறந்த நீச்சல் வீரர்கள். நாங்கள் அனைவரும் சற்றும் தாமதிக்காமல் ஏரியில் குதித்து அவர்களைக் காப்பாற்றினோம். 18 பேரைக் காப்பற்றிய அந்தத் தருணம் மிகவும் சிறப்பானது. ஆனால், பலரைக் காப்பாற்ற முடியாமல் போன வருத்தமும் உண்டு.

தாங்கள் பல இடங்களில் பணியாற்றியுள்ளீர்கள். அதில் உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது?

கோவையில் கமிஷனராக இருந்த காலம் எனக்கு மிகவும் பிடித்தது. காரணம், அந்த ஊர் மக்கள் பண்போடும், அன்போடும் பழகினார்கள். அவர்களின் தேவையை உரிமையோடு என்னிடம் கூறுவார்கள். அங்கு, அடிக்கடி மாணவர்கள் பலர் என்னை நேரில் சந்தித்துப் பேசுவார்கள். அதுதான் மாணவர்களுடனான எனது இந்தப் பயணத்துக்குத் தொடக்கம்.

இன்று காதலில், பரீட்சையில் தோற்பதெற்கெல்லாம் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்களே?

இளைஞர்கள் தோல்வியை ஏற்கும் மனப்பக்குவத்தை கற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் குழந்தைகள் கூட பனிச்சறுக்கு போன்ற ஆபத்தான விளையாட்டுக்களை மகிழ்ச்சியாக விளையாடுகின்றனர். அப்படி ஆபத்துகளையும், கஷ்டங்களையும் இளைஞர்கள் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்களது மனவலிமை அதிகரித்து பிரச்னைகளை எதிர்கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு வரும்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவார் அப்துல் கலாம் பற்றி...?

அவர் மிகப்பெரிய மனிதர். ஈடு இணையற்ற அறிவாளி. அவரின் பெருமைகள் இவ்வளவு தூரம் பரவியதற்குக் காரணம், அவரது எளிமைதான். ராஷ்ட்ரபதி பவனில் தன் உறவினர்கள் தங்கியதற்கான வாடகையை தன் ஊதியத்திலிருந்து செலுத்தியவர். அந்த மனம் நம்மில் யாருக்கு வரும். அவரது இழப்பு சற்று ஈடுகொடுக்க முடியாததுதான். இந்தியா 2020 என்ற அவரது கனவு முழுமையாய் நிறைவேற வேண்டும். அவரது ஆசைப்படி இளைஞர்கள் இப்பொழுது துடிப்போடு செயல்படுகின்றனர். அதனால், விரைவில் நம் நாடு வல்லரசாய் மாறக்கூடும்" என்று புன்னகையோடு நமக்கு விடை கொடுத்தார்.

                                                                                                                                                           - மு.பிரதீப் கிருஷ்ணா

படங்கள்: சரண் பிரசாத்

                                                                                                                                                     ( மாணவர் பத்திரிகையாளர்கள்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்