ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்தில் புனித நீராட குவிந்த பக்தர்கள்!

ராமேஸ்வரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் புனித நீராட, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்.

இந்துக்களின் முக்கிய தினங்களில் ஆடி அமாவாசை தினமும் ஒன்றாகும். இறந்த தங்கள் முன்னோர்கள் நினைவாக இந்துக்கள் மாதந்தோறும் அமாவாசை தினங்களில் விரதம் இருப்பது வழக்கம். இதில் ஆடி, புரட்டாசி, தை மற்றும் மாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்றைய தினம் நாட்டில் உள்ள கடல், ஆறு, ஏரி, குளம், அருவிகளில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி விரதம் இருப்பர்.

இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை, இன்று காலை கடைபிடிக்கப்பட்டது. இந்திய வான சாஸ்திரத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரிய நிகழ்வுகள் நடைபெறும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை தினம் ஆடி மாதத்தின் கடைசி நாட்களில் வந்துள்ளது ஒரு அரிய நிகழ்வாகும். அதுவும், மகா மகா வருடத்தில் இந்த அமாவாசை வந்திருப்பது மற்றொரு சிறப்பாகும். இதையொட்டி, புனித ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு நேற்று மாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வர தொடங்கினர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேரூந்து, கார், வேன் மற்றும் ரயில் மூலம் ராமேஸ்வரத்தில் குவிந்திருந்த பக்தர்கள், இன்று காலை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்கள் நினைவாக சிறப்பு வழிபாடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள், ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு உள்ளே உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 2 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு ஸ்ரீராமர் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் கொடுத்தார். அதனை தொடர்ந்து, ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கில் வீதி உலா நடந்தது. பக்தர்கள் கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து 22 தீர்த்தங்களில் புனித நீராடினர்.

அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேரூந்துகளும், மதுரையில் இருந்து சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தீர்த்தமாட வந்திருந்தவர்கள், ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்திற்கும் சென்று அஞ்சலி செலுத்தினர். இதனால், அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்கத்தின் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் பால் ஆகியனவும், ராமகிருஷ்ணா மடத்தின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

- இரா.மோகன்

படங்கள்:
உ.பாண்டி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!