இலவசம் வேண்டாம்... டாஸ்மாக்கை மூடு... கொதித்தெழுந்த கிராமத்து பெண்கள்!

நெல்லை: டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி இலவச பொருட்களை ஒப்படைக்க 5 கிராமங்களை சேர்ந்த பெண்கள், நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

நெல்லை மாவட்டம், கடையம் அருகே உள்ள மருதடியூர், பாவூர்சத்திரம், அரியப்புரம், வெய்காலிப்பட்டி, வெங்காடம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், மதுஒழிப்பு ஆர்வலரான திருமாறன் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்தனர்.

அப்போது, இலவச அரிசி, டிவி, மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்கள் தங்களுக்கு தேவையில்லை என்றும், மதுக்கடைகளை மூடினாலே நிம்மதியாக வாழ முடியும் என்றும் தெரிவித்த பெண்கள், அவற்றை மாவட்ட ஆட்சியரும் ஒப்படைக்க போவதாக கூறினர்.
 

மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் அவர்களிடம் பேசி, அவர்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

இது குறித்து பெண்கள் கூறுகையில், "மதுக்கடைகள் இருப்பதால் சிறுவர்கள் கூட மதுக்குடிக்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். எங்கள் குடும்பத்தின் வருமானம் அனைத்தும் மதுக்கடைகளுக்கு செல்கிறது. அதனால் மதுக்கடைகளை மூடாமல் இலவசங்கள் கொடுப்பதால் எங்களுக்கு எந்த பலனும் இல்லை. எனவேதான் இலவச பொருட்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்தோம். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தால் ஆட்சியர் அலுவலகத்திற்குள் வைத்துவிட்டு செல்வோம்" என்றனர்.
 

இலவச பொருட்களை திருப்பி ஒப்படைக்க பெண்கள் திரண்டு வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

-ஆண்டனிராஜ்

படங்கள்:
எல்.ராஜேந்திரன்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!