வெளியிடப்பட்ட நேரம்: 10:03 (20/08/2015)

கடைசி தொடர்பு:13:07 (20/08/2015)

விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வி.சேகர் மீண்டும் சிறையில் அடைப்பு!

சென்னை: சாமி சிலைகள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல திரைப்பட இயக்குனர் வி.சேகர், போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

வந்தவாசி அருகே உள்ள சவுந்தர்யபுரத்தில் இருக்கும் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 3 சிலைகளும், வந்தவாசி அருகே உள்ள பையூர் என்ற கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் 3 சிலைகளும் கடந்த ஜனவரி மாதம் திருடப்பட்டன. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் ராமானுஜபுரத்தில் உள்ள மணிகண்டேஸ்வரர் கோவிலிலும் சிவன், பார்வதி சிலைகள் திருட்டு போனது.

இந்த 3 கோவில்களில் திருடப்பட்ட 8 சாமி சிலைகளும் விற்பதற்காக கொண்டு செல்லப்பட்டபோது, தி.நகரில் சிலை திருட்டு தடுப்பு போலீசார் சிலைகளை மீட்டனர். மேலும், இந்த சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக 4 வழக்குகளை பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். முதலில் சினிமா தயாரிப்பு நிர்வாகி தனலிங்கம், சென்னை அரசு அச்சக ஊழியர் கருணாகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பிரபல திரைப்பட இயக்குனர் வி.சேகர் இந்த சிலை திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதும், சிலைகள் திருடுவது சம்பந்தமாக நடத்திய சதி திட்டத்தில் வி.சேகருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

மேலும், திருடப்பட்ட சிலைகளை வி.சேகர் வசிக்கும் வீட்டில்தான் முதலில் மறைத்து வைத்திருந்ததும் அம்பலமானது. இதனால் வி.சேகரை, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சேகரை, 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் சென்னை பெருநகர 2வது நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். ஆனால் நீதிமன்றம், 3 நாட்கள் சேகரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. வெள்ளிக்கிழமை வரை அனுமதி காலம் உள்ள நிலையில், நேற்று பிற்பகலில் வி.சேகரை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் திடீரென ஆஜர்படுத்தினார்கள்.

அப்போது, விசாரணைக்கு வி.சேகர் ஒத்துழைக்கவில்லை என்றும், இதனால் அவரை மீண்டும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் சிலை திருட்டு தடுப்பு போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதி சத்யா, சேகரை நீதிமன்றக் காவலில் அடைக்கும்படி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, போலீஸார் சேகரை புழல் மத்திய சிறையில் மீண்டும் அடைத்து உள்ளனர்.

விசாரணைக்கு சேகர் ஒத்துழைக்காததால், இந்த வழக்கில் பின்னடைவு ஏதும் ஏற்படவில்லை என்றும், தலைமறைவாக இருக்கும் 11 குற்றவாளிகளை கைது செய்ய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சேகர் தாக்கல் செய்துள்ள மனு,  நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்