வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (25/08/2015)

கடைசி தொடர்பு:12:54 (25/08/2015)

ராமஜெயம் கொலை தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை: பரபரப்பு தகவல்கள்!

திருச்சி: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை தொடர்பாக, அவரின் உதவியாளர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையை  சி.பி.சி.ஐ.டி. போலீசார் இரண்டாவது நாளாக நடத்தி மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சோதனையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு நிலவுகிறது.  

ராமஜெயம் கொலை வழக்கில்  உயர் நீதிமன்றம் விதித்த கெடுவைத் தொடர்ந்து, விசாரணையை  தீவிரப்படுத்தி உள்ளனர் சி.பி.சி.ஐ.டி. போலீசார். அக்டோபர் 28 ஆம் தேதிக்குள் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்பதால் கடைசி கட்ட முயற்சியாக,  சந்தேகப்படும் நபர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை மூலம் விசாரணையைத்  தொடங்கி உள்ளனர்.

இதற்காக ராமஜெயம் அலுவலகத்தில் பணியாற்றிய அவரது உதவியாளர்கள் திருச்சியைச்  சேர்ந்த கேபிள் மோகன் மற்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச்  சேர்ந்த நந்தகுமார் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் உண்மை கண்டறியும் சோதனைக்காக சென்னை அழைத்துச் சென்றனர். அங்குள்ள சாஸ்திரி பவனில் இந்த சோதனையுடன் கூடிய விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 2012 ஆம்  ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி, ராமஜெயம் வாக்கிங் சென்றபோதுதான் கடத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதே வேளை அவர் முதல் நாள் இரவே கடத்தப்பட்டதாகவும் சர்ச்சை தகவல் எழுந்தது. இது தொடர்பாக தொடக்கத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கேபிள் மோகனிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முரணாக சில தகவல்களைக்  கூறியதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனையில் கேபிள் மோகனிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது ராமஜெயம் வாக்கிங் செல்லும்போது சந்திக்கும் நபர்கள், காலையில் அலுவலகத்தில் சந்திக்க வருபர்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

அதே போன்று ராமஜெயம் பகையைச்  சம்பாதித்துக் கொண்ட நபர்கள் குறித்தும், ராமஜெயத்தின் தினசரி நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது. 5 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த சோதனை இன்றும் 2 ஆவது நாளாகத்  தொடர்கிறது.

கேபிள் மோகனிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, தொழில் மேற்பார்வையாளரான நந்தகுமாரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது. திருச்செங்கோட்டை சேர்ந்த நந்தகுமார் திருச்சி, தில்லைநகர் 2 ஆவது குறுக்குத் தெருவில் உள்ள ராமஜெயத்தின் அலுவலகத்தில் தங்கி இருந்து, அவரது தொழில் தொடர்பான விஷயங்களைக்  கவனித்து வந்தார்.

குவாரி தொழில், கிரானைட் தொழில் உள்ளிட்ட வேலைகளில் ராமஜெயத்திற்கு உதவியாக அவர் இருந்து வந்தார். குவாரி பிரச்னை தொடர்பாக ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுவதால், நந்தகுமாரிடமும் ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். அப்போது அவரது பதில்கள் முரணாக இருந்ததால், தற்போது அவரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது.

இவர்கள் 2 பேரிடம் இருந்தும் பெறப்படும் தகவல்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார், விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளனர்.

முதற்கட்டமாக கேபிள் மோகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் நந்தகுமாரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அதன் பிறகு கிடைக்கும் தகவல்களை வைத்து மேலும் பலரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.

இதில் முக்கிய பிரமுகர்கள் பெயர்களும் உள்ளன. மதுரை உயர்நீதிமன்ற கெடு முடிய இன்னும் 30 நாட்களே உள்ளதால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால் விரைவில் ராமஜெயத்தை கொலை செய்தவர்கள் பிடிபடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்