வெளியிடப்பட்ட நேரம்: 14:14 (03/09/2015)

கடைசி தொடர்பு:14:20 (03/09/2015)

மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வங்கிக் கடன்!

சென்னை: தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.6,000 கோடி வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.   

சட்டமன்றத்தில்  இன்று(வியாழன்) 110 ஆவது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில்,

" சுய உதவிக் குழுக்கள் தங்களது வாழ்வாதார நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக பெரும்பாலும் வங்கிக் கடனையே சார்ந்துள்ளன. மேலும், சுய உதவிக் குழுக்களுக்கு நுகர்வு அல்லது பொருளாதார நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக நிதி உதவி தேவைப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு எனது தலைமையிலான அரசு சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 700 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் சிறு கடன்கள் வழங்குவதற்காக 58 கோடி ரூபாயினை அமுத சுரபி நிதியாக நடப்பாண்டில் தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தின் மூலம் வழங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிராமப்புறங்களில் ஒரே தொழிலை மேற்கொள்ளும் சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட, குழுவிற்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் 1500 ஒத்த தொழில் குழுக்களுக்கு 15 கோடி ரூபாய் நிதி உதவி, தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர், சிறு தொழில் செய்து வருவாய் ஈட்டி, வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அவர்களுக்கு வட்டியில்லா கடன் அளிக்கும் வகையில் 600 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம், 12 கோடி ரூபாய் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் சிறிய தொழில்களை தொடங்கி வாழ்வாதாரம் பெற வழி வகுக்கும்.

சுய உதவிக் குழுக்களுக்கு போதுமான கடன் உதவியை உரிய நேரத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிகள் மூலம் ஏற்படுத்தி தருவதன் வாயிலாக பெண்களை பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி கடன் சுமைகளிலிருந்து விடுபட வழிவகை செய்யப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்யும் வகையில் கடந்த 4 ஆண்டுகளில் அவர்களுக்கு 20,270 கோடி ரூபாய் கடனாக வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டிலும் சுய உதவிக் குழுக்களுக்கு 6,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள், கிராமங்கள் மேம்படவும், கிராம மக்கள் வளம் பெறவும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பொருளாதார வளர்ச்சி அடையவும், கிராமப்புற இளைஞர்கள் வேலை வாய்ப்பினைப் பெறவும் வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்