சம்பா நெற்பயிரை காக்கக்கோரி காவிரியில் வினோத வேண்டுதல்! | Plea to save samba crop in Cauvery delta

வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (10/09/2015)

கடைசி தொடர்பு:15:16 (10/09/2015)

சம்பா நெற்பயிரை காக்கக்கோரி காவிரியில் வினோத வேண்டுதல்!

ஸ்ரீரங்கம்: சம்பா நெற்பயிரை காப்பாற்றக்கோரி காவிரித்தாயிடம் மனு கொடுத்து, தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணியினர் வினோத வேண்டுதல் செய்துள்ளனர்.

இந்த வருடம் (2015) சம்பா சாகுபடியை,  15 லட்சம் ஏக்கரில் டெல்டா மாவட்ட விவசாயிகள் துவக்கி உள்ளனர். இந்த சூழ்நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.

மேலும், நெல் நாற்று நடவுக்கான போதிய அளவு தண்ணீர் இல்லாத நிலையில், கர்நாடக அரசு நான்கு அணைகளில் முழு அளவில் தண்ணீரை தேக்கி வைத்துக்கொண்டே தண்ணீரை தரமறுக்கிறது. இவ்வாறு செய்வது டெல்டா மாவட்ட விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. தமிழக அரசு கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டேதான் இருக்கிறது.

இந்நிலையில் நேற்று, (9.9.2015) ஸ்ரீரங்கம் பகுதி தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணியினர், " காவிரி டெல்டா விவசாயிகள், சம்பா சாகுபடியை எப்படி காப்பாற்றுவது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

ஆதலால், காவிரித்தாயே நீயே எங்களை காப்பாற்ற வேண்டும். நல்ல மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து மேட்டூர் அணை நிரம்பி, காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வந்து சம்பா நெற்பயிரை காப்பாற்ற வேண்டும்!"  என்ற கோரிக்கையுடன் காவிரித்தாயிடம் மனு கொடுக்கும் வினோத வேண்டுதலில் ஈடுபட்டனர்.

- துரை.நாகராஜன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்