வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (24/09/2015)

கடைசி தொடர்பு:15:55 (24/09/2015)

தீபாவளி பண்டிகைக்கு ஆர்கானிக் புடவைகள்: அறிமுகம் செய்துள்ளது கோ-ஆப்டெக்ஸ்!

சென்னை: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இயற்கை முறையில் தயாரான ஆர்கானிக் புடவைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் எனப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் கைத்தறி மற்றும் நெசவு தொழிலை பாதுகாக்க காஞ்சிபுரம், ஆரணி, ஈரோடு உள்பட பல இடங்களில் தயாராகும் துணி ரகங்கள் மற்றும் ஆடைகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறது. தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் பொது மக்களை கவரும் வகையில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 30 சதவீதம் தள்ளுபடி மற்றும் விதவிதமான டிசைன்களை தயாரிக்கப்பட்ட பட்டுப்புடவைகள் மற்றும் கைத்தறி, காட்டன் ஆடைகளை அறிமுகம் செய்வது வழக்கம்.

தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தங்களது விற்பனை நிலையங்களில் 30 சதவீத தள்ளுபடிகளுடன் விற்பனையை தொடங்கி வருகின்றன. சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நெல்லை, தஞ்சாவூர் மண்டலங்களில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் மூலம் விற்பனைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 200க்கு அதிகமான வெவ்வேறு டிசைன்களில் தயாரிக்கப்பட்ட பட்டு சேலைகள் மற்றும் 250 விதவிதமான டிசைன்களில் தயாரிக்கப்பட்ட கைத்தறி மற்றும் காட்டன் புடவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக கோ-ஆப்டெக்ஸ்சின் மதுரை மண்டல மேலாளர் ரஞ்சனி கூறும்போது, ''கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு பட்டுப்புடவைகள், கைத்தறி மற்றும் காட்டன் புடவைகளுடன் புதிதாக உடல் நலத்திற்கும், சுற்றுச்சுழலுக்கும் தீங்கு விளைவிக்காத ரசாய உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் காட்டன் புடவைகளை அறிமுகம் செய்துள்ளோம். மற்ற காட்டன் புடவைகளைப்போல்தான் ஆர்கானிக் புடவைகளும் நெய்யப்படும்.

ஆனால், அந்த புடவைகளுக்கான கலர் மட்டும் இயற்கை முறையில் ரோஜா, செம்பருத்தி போன்ற பல்வேறு பூ வகைகளிடம் இருந்தும், வெங்காயம், பீட்ரூட் போன்ற காய்கறிகள், இது தவிர செடிகள், கொடிகள் போன்ற தாவரங்களை பயன்படுத்தி அவற்றில் இருந்து கலர்கள் சேகரிக்கப்பட்டு எளிதில் சாயம் போகாத வகையில் பலத்த ஆய்வுகளுக்கு பிறகு இந்த புடவைகளில் அந்த இயற்கை கலர்கள் சேர்க்கப்படும். இந்த முறைகள் மூலம்தான் ஆர்கானிக் காட்டன் புடவைகள் தயாராகுகின்றன.

குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் காந்தி பல்கலைக்கழகம், கோவை, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஆர்கானிக் முறையில் காட்டன் புடவைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இயற்கை முறையில் தயாரான இந்த ஆர்கானிக் காட்டன் புடவைகளின் விலை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 300 முதல் ரூ.4,000 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் பழமையான பாரம்பரியமிக்க செட்டிநாட்டின் பாரம்பரிய சின்னங்களை புடவைகளில் நெய்யச் செய்து, செட்டிநாடு புடவைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கு உயர்ரக பருத்தி ரகமான ‘லெனர்ட்’ என்ற பருத்தி நூலில் இருந்து ரெடிமேட் சட்டைகள் புதிதாக இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. லெனர்ட் ரக நூல் வகை ரொம்பவும் குளிர்ச்சியானவை. உடலை எப்போதும் குளிர்ச்சியாகவே வைத்திருக்கும். பெரிய பெரிய தனியார் நிறுவனங்களில் இந்த ரக சட்டை துணிகள் ஒரு மீட்டர் ரூ.1,500 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை ஆகும். ஆனால், கோ-ஆப்டெக்ஸ்சில் இந்த லெனர்ட் ரக ஆண்கள் சட்டைக்கு ரூ.1,500 மட்டுமே நிர்ணியக்கப்பட்டு உள்ளது" என்றார்.

- எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்