கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜை சுட்டுப்பிடிக்க உத்தரவு? | Shooting order against Yuvaraj?

வெளியிடப்பட்ட நேரம்: 17:02 (05/10/2015)

கடைசி தொடர்பு:18:58 (05/10/2015)

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜை சுட்டுப்பிடிக்க உத்தரவு?

நாமக்கல்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் யுவராஜின் மறைவிடத்தை போலீஸ் நெருங்கி விட்டதாகவும், தேவைப்பட்டால் சுட்டுப்பிடிக்க  உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினியர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் 23-ம் தேதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், திருச்செங்கோடு அருகே ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இந்த வழக்கு தொடர்பாக 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதில் 4 பேர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான யுவராஜ்,  கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளார்.

அதே சமயம் தலைமறைவாக இருந்தபடியே, சமூக வலை தளங்களில் தன் கருத்தை வெளியிட துவங்கினார் யுவராஜ். போலீஸ் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசினார். கடிதம் எழுதினார். தனது பேச்சை பதிவு செய்து வாட்ஸ் அப்களில் தொடர்ச்சியாக வெளியிடவும் செய்தார். இந்த சூழலில்தான் கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா, திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு காவல்துறை உயர் அதிகாரிகளின் நெருக்குதல் காரணம் என எல்லோரும் குற்றஞ்சாட்டினர். அதில் ஒருவராக தன்னையும் இணைத்துக் கொண்டார் யுவராஜ். விஷ்ணுபிரியாவுடன் தான் பேசிய ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

இதனால் காவல் துறைக்கு, யுவராஜை கட்டாயம் கைது செய்ய வேண்டும் என்ற கடுமையான நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில் எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்த்த கதையாக, நேற்று தொலைக்காட்சி ஒன்றுக்கு யுவராஜ் பேட்டி அளித்தது காவல்துறைக்கு மேலும் அவமானத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனால் உடனடியாக யுவராஜை கைது செய்யவேண்டும் என காவல்துறை தலைமையிடத்தில் இருந்து சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சிபிசிஐடி போலீசாருடன் இணைந்து நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை மாவட்ட தனிப்படை போலீசாரும் தேடுதல் வேட்டையில் களம் இறங்கி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் யுவராஜ் கோவை அருகே ஒரு கிராமத்தில் பதுங்கி இருப்பது தெரிந்து, அக்கிராமத்தை போலீஸார் சுற்றி வளைத்துள்ளதாக கூறப்படுகிறது. யுவராஜ் தப்பிவிடாமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அநேகமாக இன்னும் ஓரிரு தினங்களில் யுவராஜ் கைது செய்யப்படலாம் என்றும்,  யுவராஜ் ஆயுதங்களுடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் தேவைப்பட்டால் அவரை சுட்டுப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் இதுகுறித்து காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்