யுவராஜ் விரைவில் சரண் அடைவார்: மனைவி பரபரப்பு தகவல்!

சேலம் : கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டுவரும்  யுவராஜ் விரைவில் சரண் அடைவார் என்று அவரின் மனைவி சுவிதா தெரிவித்துள்ளார்

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான சந்திரசேகர், செல்வராஜ், ரஞ்சித்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு நாமக்கல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளைச்  சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்திரசேகர், செல்வராஜ், ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரும் இன்று(செவ்வாய்)  காலை 11 மணிக்கு விடுதலை ஆனார்கள்.

அவர்களை அழைத்துச் செல்ல யுவராஜின் மனைவி சுவிதா ஆத்தூர் வந்திருந்தார். அவர் 3 பேருக்கும் மாலை அணிவித்து வரவேற்க முயன்ற போது சிறை வளாகத்தில் மாலை அணிவிக்கக்கூடாது என்று போலீசார் கூறிவிட்டனர்.

இதைத் தொடர்ந்து மாலை அணிவிக்காமல் அவர்களை சுவிதா அழைத்துச் சென்றார். முன்னதாக சுவிதா செய்தியாளர்களிடம்  கூறுகையில், "கோகுல்ராஜ் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் முறையாக விசாரித்து வருகிறார்கள். எனது கணவர் சரண் அடைய வாய்ப்புள்ளது" என்றார்.

அதன்பிறகு விடுதலையான 3 பேருடன் அவர் சங்ககிரி புறப்பட்டுச் சென்றார். அவர்கள் சங்ககிரியில் உள்ள தீரன்சின்னமலை மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

3 பேர் விடுதலையையொட்டி ஆத்தூர் கிளைச் சிறை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் ஆத்தூரில் பரபரப்பு நிலவியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!